டிசம்பர் 6... தேசம் நன்றியுடன் நினைவு கூறும் அண்ணல் அம்பேத்கர் தினம்! - VanakamIndia

டிசம்பர் 6… தேசம் நன்றியுடன் நினைவு கூறும் அண்ணல் அம்பேத்கர் தினம்!

சென்னை: காலம் தேசத்துக்கு அளித்த கொடையான மாமேதை டாக்டர் பிஆர் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி இளைஞர்கள் பலர் அவரது கருத்துக்கள் மற்றும் கொள்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அண்ணல் அம்பேத்கர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பிறந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் முதலாவது சட்ட அமைச்சராகப் பணியாற்றி, நாட்டின் மக்களுக்காக சட்டங்களை உருவாக்கியவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியரும் இவர்தான்.

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழிக்கப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். ‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.

பின்னர் 1948-ம் ஆண்டில் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும். 1954-ம் ஆண்டு ஜுன் முதல் அக்டோபர் வரை படுக்கையில் கழிக்க நேர்ந்தது. இவரின் உடல்நலம் கசப்பூட்டும் அரசியல் நிகழ்வுகளால் மேலும் பாதிக்கப்பட்டது. 1955-ம் ஆண்டில் இவர் உடல்நலம் மேலும் மோசமடைந்தது. புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6-ல் டெல்லியிலுள்ள இவர் வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.

காலம் கடந்தாலும் இன்று அவரின் நினைவு தினம் பல கோடி இளைஞர்களால் அனுசரிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் ஏராளமானோர், அவரின் கொள்கை, கருத்துக்கள் மற்றும் அவரின் குணாதிசயங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!