படிக்காத மேதை காமராஜரும் ... நீட் பற்றி தெரியாத பரமக்குடிக்காரரும்! - VanakamIndia

படிக்காத மேதை காமராஜரும் … நீட் பற்றி தெரியாத பரமக்குடிக்காரரும்!

பள்ளிப்படிப்பு படிக்காத காரணத்தால் நீட் தேர்வு பற்றியும் அதனால் தமிழக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் தெரியாது என்று கமல் ஹாசன் கூறியிருக்கிறார். என்ன ஒரு ஆணவமான பதில் அல்லவா!

தமிழ்நாட்டில் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்று கூச்சலிடுபவருக்கு, நாட்டு மக்களின் முக்கிய பிரச்சனைகள் பற்றி தெரியவில்லை என்பது கேலிக்கூத்தாக உள்ளது.

நீட் தேர்வுகள் பற்றி ஜனவரி மாதம் முதலாகவே தமிழகமெங்கும் போராட்டங்களும், நீதிமன்ற வழக்குகளும் நடந்து வருகின்றன. பெற்றோர்கள் மாணவர்களின் அழுகுரல்கள் ஊடகங்களில் வெளி வந்த வண்ணம் இருக்கிறது. அரசியல் கட்சிகளும் தங்கள் பங்குக்கு ஆர்ப்பாட்டம் நடத்தி வந்துள்ளார்கள்.

ஆறு மாதங்களாக தமிழகத்தை சுழற்றி அடித்து வரும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றான நீட் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ள கமல் ஹாசன், மாணவ சமுதாயத்தையே அவமதித்துள்ளார்.

அவர் கூறியுள்ள சாக்குப்போக்கு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. பள்ளிப்படிப்பு படித்தவர்களுக்கு மட்டும் தான் நீட் பற்றி தெரிந்து இருக்க வேண்டுமா என்ன?. இவரைப் போலவே பள்ளிப் படிப்பு படிக்காத காமராஜர் தானே, தமிழர்களுக்கு கல்வி வேண்டும் என்று நாடெங்கும் பள்ளிகளைத் திறந்தார். மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்தார்.

மகளுக்கு டெங்கு காய்ச்சல் வந்ததால், அது பற்றி தெரியும் என்றும் கூறியிருக்கிறார். அதாவது எங்களுக்கு வந்தால் மட்டும் தான் நாங்கள் கவலைப்படுவோம். மற்றவர்களுக்கு வரும் பிரச்சனைகள் பற்றி எனக்கென்ன கவலை என்பது போலத்தான் இருக்கிறது.

ரஜினிக்கு அது தெரியுமா இது தெரியுமா என்று கேள்வி எழுப்பிய சீமான்களும் சீமாட்டிகளும் இவரைப் பார்த்தும் கேட்பது தானே. நீட் பற்றி எதுவும் தெரியாது என்று ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்துள்ளார்.

இந்த அதிமேதாவிக்கு ஊழல் பற்றி மட்டும் என்ன விவரம் தெரிந்து இருக்கப்போகிறது. அழுத்திக் கேட்டால், நான் ஊழல் பண்ணவில்லை அதனால் எதுவும் தெரியாது என்று சொல்லிவிடப்போகிறார்.

ஸ்கிரிப்டில் இல்லாத கேள்விகளை எல்லாம் கேட்டால், பாவம் அவர் என்ன செய்வார். நீட் தேர்வு பற்றி கேட்ட செய்தியாளர் தப்புக்கு, கமல் ஹாசனை குறை சொல்வதா என்ன?

கமல் ஹாசன் சொந்தமாக பேசவும் இல்லை. சொந்தமாக ட்வீட் செய்யவும் இல்லை என்று தான் நம்பத் தோன்றுகிறது. அந்த டெல்லி முதலாளி சொல்வதை அச்சுப்பிசகாமல் இந்த பெரிய முதலாளி செய்து வருகிறார்.

டிஆர்பி யை மட்டுமே கண்ணும் கருத்துமாக கொண்ட தமிழக ஊடகங்கள், கமல் ஹாசன் என்னும் பிம்பத்தை , காற்றடைத்த பலூன் போல் ஊதிப் பெரிதாக்குகிறார்கள். மக்களும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். வெகு விரைவில் பலூனில் உள்ள காற்று இறங்கி விடும்.

– ‘ரைட்’ பாண்டியன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!