இவரு அரசியல் பேச்சுக்கு மக்கள் பலிகடாவா? கமல்ஹாசனின் களவாணித்தனம்! - VanakamIndia

இவரு அரசியல் பேச்சுக்கு மக்கள் பலிகடாவா? கமல்ஹாசனின் களவாணித்தனம்!

சென்னை: தமிழகம் ஊழலில் திளைக்கிறது என்று கமல்ஹாசன் குற்றம் சாட்டினார். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் ஆதாரத்தைக் காட்டுங்கள் என்றார். பதிலுக்கு கமல்ஹாசன் மக்களை ஆதாரம் அனுப்பச் சொல்லி அறிக்கை விட்டுள்ளார்.

கூவாத்தூர் பேரமும் அதைத் தொடர்ந்து ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள மத்திய பாஜக அரசுக்கு வளைந்து நெளிந்து செல்வதுமாக ஜெயலலிதா இல்லாத அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. கூவாத்தூர் பேரம் பற்றி சம்ம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ ஒருவரே புட்டு புட்டு வைத்து தொலைக்காட்சியில் வெளியானது.

அதைக் காரணம் காட்டி ஆட்சியை நீக்க வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்தார் மு.க.ஸ்டாலின். கவர்னரும் சபாநாயகரிடம் விளக்கம் கேட்டுள்ளார். சபாநாயகர் இன்னும் பதில் அனுப்பினாரா என்று தெரியவில்லை.

இந்நிலையில், எந்த ஒரு சம்பவத்தையோ அல்லது நபரையோ, ஊழல் பேரத்தையோ குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக ஊழல் மலிந்து விட்டது என்று கமல்ஹாசன் குற்றம் சாட்டியிருந்தார். அப்படிச் சொன்னவர் யாருக்கும் தெரியாத பொதுமக்களில் ஒருவர் என்றால் எந்த அமைச்சரும் எதையும் சொல்லியிருக்க மாட்டார்கள்.

தமிழக மக்களிடம் பிரபலமான ஒருவர் தங்கள் மீது குற்றச்சாட்டை வைத்தால், ஆதாரத்தைக் காட்டுங்கள் என்று கேட்பது இயல்பு தானே! அவர் குற்றவாளியாகவே இருந்தாலும் ஆதாரத்தை கேட்கும் உரிமை அவருக்கு சட்டப்படி இருக்கிறது அல்லவா!

ஒட்டு மொத்த தமிழக அரசை குற்றம் சாட்டும்போது ஆதாரத்தைக் காட்டுங்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் மென்மையாகத் தான் கேட்டிருக்கிறார். கமலிடம் ஆதாரம் இருந்தால் காட்டிவிட்டுப் போகவேண்டியது தானே.. ஊரே சொல்லுது அதனால் நானும் சொல்கிறேன் என்ற வகையில் தான் கமலின் பதில்கள் இருக்கிறது. ’அவனும் சொல்றான்.. அதனால் நானும் சொல்றேன்னு’ சொல்வதற்கு இதென்னெ நாயகன் பட டயலாக்கா?

அதாவது பொத்தாம் பொதுவாக கேள்விப்பட்டதை மட்டுமே நம்பியே குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார். என்னென்ன ஊழல் நடந்துள்ளது யார் யார் சம்மந்தப்பட்டுள்ளார்கள், எத்தனை கோடி ரூபாய் இழப்பு என்றெல்லாம் எந்த ஒரு தகவலும் இல்லாமல் ஊழலில் தமிழகம பிஹாரை மிஞ்சி விட்டது என்றெல்லாம் சினிமா ஸ்க்ரிப்ட் போல் சொல்லி விட்டார்.

எதிர் தரப்பு ஆதாரம் கேட்டால், மக்களே நீங்கள் ஆதாரம் அனுப்புங்கள் என்று கோரிக்கை வைக்கிறார். இவருக்கே ஆதாரம் கிடைக்கல்லையாம். பொதுமக்களிடம் என்ன ஆதாரம் கிடைக்கப்போகிறது. சாமானியர்கள் எல்லாம் துப்பறியும் சாம்புவா? என்ன அர்த்தத்தில் மக்களை ஆதாரத்துடன் அமைச்சர்களுக்கு ஊழல் குற்றச்சாட்டுகளை அனுப்பச் சொல்கிறார் என்று புரியவில்லை.

உண்மையிலேயே அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த வேண்டுமென்றால், இவர் அந்த ஆதாரத்தை திரட்டி சட்டப்படி வழக்கு தொடரலாம். அதை விட்டு, சைலண்டா மக்கள் பக்கம் திருப்பி விட்டு எஸ்கேப் ஆகிறார் உலக நாயகன். இவர் மக்கள் நாகரீகமாக கடிதம் அனுப்பவேண்டும் என்கிறார். ஆனால் எதிரணியினரை ’எலும்பு வல்லுனர்’ என்று வசைபாடியுள்ளார். இவருக்கும் எச் ராஜாவுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது.

அமைச்சர்கள் ஊழல் செய்யவில்லை, தமிழகத்தில் ஊழல் இல்லை என்று நாம் சொல்ல வில்லை. குற்றச்சாட்டுகளை சொல்வதென்றால், தெளிவாக இன்னின்ன ஊழல் என்று பட்டியலிட்டு, தகுந்த ஆதாரங்களை சேகரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கச் செய்யவேண்டும். அது தான் அரசியல் நாகரீகம்.

பிக் பாஸ் டிஆர்பிக்காகவா அல்லது பாஜகவின் பி டீம் ஆ என்று தெரியவில்லை.. ஆனால், யோசிக்காமல் பேசிவிட்டு அப்புறம் யோசிக்கிறார் கமல்ஹாசன் என்று மட்டும் தெளிவாக தெரிகிறது.

– ’ரைட்’ பாண்டியன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!