வாஷிங்டன்: அதிபர் ட்ரம்பின் தனிப்பட்ட விவகாரங்களை கவனித்து வரும் வழக்கறிஞர் மைக்கேல் கோயன் அலுவலகத்தில் எஃப்பிஐ அதிரடியாக ரெய்டு நடத்தி ஆவணங்களை கைப்பற்றியுள்ளது. இது நாட்டுக்கே ஆபத்து என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
2016 தேர்தலில் ரஷ்யா தலையீடு விவகாரத்தைப் பற்றி சிறப்பு விசாரணை வழக்கறிஞர் பாப் முல்லர் விசாரித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக ட்ரம்பின் வழக்கறிஞர் கோயன் அலுவலுகத்தில் முறைப்படி நீதிபதியிடம் வாரண்ட் பெற்று எஃபிஐ ரெய்டு நடத்தியுள்ளனர்.
இந்த ரெய்டில் ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்-க்கு ஒரு லட்சத்து முப்பதாயிரம் டாலர்கள் கொடுக்கப்பட்டதற்கான ஆவணங்களும், மேலும் பல முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆபாசப் பட நடிகையுடன் ட்ரம்புக்கு உள்ள தொடர்பை வெளியே சொல்லாமல் இருப்பதற்காக, தேர்தலுக்கு முன் அவருடன் பேரம் பேசி குறிப்பிட்ட தொகையை கோயன் வழங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
வங்கி பண பரிவர்த்தனையில் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கோயன் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. தன்னுடைய தனிப்பட்ட வழக்கறிஞர் அலுவலகத்திலேயே ரெய்டு என்பதை ஏற்றுக் கொள்ள முடியாத ட்ரம்ப், இந்த நடவடிக்கை நாட்டுக்கே ஆபத்து என்று கூறியுள்ளார்.
எஃப்பிஐ அத்துமீறி நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் நீதிமன்றத்தில் வாரண்ட் பெற்று சட்டப்படி தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. ரெய்டில் சிக்கிய ஆவணங்கள் மூலம் ட்ரம்ப் பற்றிய புதிய விவகாரம் கிளம்பக்கூடும் என்ற அச்சத்தினாலேயே, அவர் இவ்வளவு ஆவேசப்படுகிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுக்கே அதிபர் என்றாலும் அவருடைய வழக்கறிஞர் அலுவலகத்திலேயே ரெய்டு தான் என்பது மக்களாட்சியில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையே உணர்த்துகிறது.
– வணக்கம் இந்தியா