மோடி - ஜேட்லி பட்ஜெட்: இந்தியா, தமிழகத்தை விட எவ்வளவு பின்தங்கியிருக்கிறது பார்த்தீர்களா? - VanakamIndia

மோடி – ஜேட்லி பட்ஜெட்: இந்தியா, தமிழகத்தை விட எவ்வளவு பின்தங்கியிருக்கிறது பார்த்தீர்களா?

சென்னை: மத்திய அரசின் 2018ம் ஆண்டு பட்ஜெட் தேர்தலுக்கான பட்ஜெட் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. மக்கள் நலத் திட்டங்களையும் விவசாய வளர்ச்சித் திட்டங்களையும் வாரி இறைத்துள்ளார் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி.

இந்த பட்ஜெட் விவரங்களைப் பார்த்த திமுகவினருக்கு கடும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. திட்டங்கள் அனைத்தும் திமுக தலைவர் கருணாநிதியால் ஏற்கனவே செயல்படுத்தப் பட்டது என்று தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான எஸ்.எஸ்.சிவசங்கர் நீண்ட ஒப்பீட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அது பற்றிய விவரம் வருமாறு:

“அப்பாவின் பெருமை மகனுக்கு தெரியாது. எதிர் வீட்டுக்காரன் அறிவாளி என நினைத்திருப்பான். தன் அப்பாவின் செயல்பாட்டை பின்பற்றிதான் எதிர் வீட்டுக்காரன் மட்டுமல்ல, ஊரே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என அறிய வரும் போது தான், மகனின் கண் திறக்கும்.

அது போல தங்களது 2018 – 2019க்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை கண்டுதான், சில பிள்ளைகளுக்கு கருணாநிதியின் பெருமை தெரிய வந்திருக்கிறது. புரிந்தும் சில பிள்ளைகள் காணாதது போல் ஓடிக் கொண்டிருக்கின்றன. சில அடுத்தத் தெரு பிள்ளைகளுக்கு நெஞ்செரிச்சல் வந்து சேர்ந்திருக்கிறது.

கலைஞர் காப்பீடு திட்டம்

10 கோடி மக்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படும், என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளது சிறப்பான திட்டம். இதைத் தான் 2006 – 11 ஆட்சியில் ‘கலைஞர் காப்பீடு’ திட்டம் என நடைமுறைப்படுத்தி பல ஏழைகளின் வாழ்வை காப்பாற்றினார் கருணாநிதி.

பின்னால் வந்த ஜெயலலிதா அதை நீர்த்துப் போகச் செய்தது வேறு விஷயம். மீண்டும் கலைஞர் காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென மக்கள் காத்திருக்கிறார்கள்.

உழவர் சந்தை திட்டம்

விளைபொருட்களை நுகர்வோருக்கு கொண்டு செல்ல ஊரக பகுதிகளில் சந்தைகள் அமைக்கப்படும் , என நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவுத்திருக்கிறார்.

இந்தத் திட்டத்தை 1996ஆம் ஆண்டு முதலமைச்சரான உடனேயே ‘உழவர் சந்தை’ திட்டம் என அறிவித்தார் கருணாநிதி. தமிழகம் எங்கும் நகராட்சிகள், பேரூராட்சிகள் வரை உழவர் சந்தை திறக்கப்பட்டு, லட்சக்கணக்கான விவசாயிகள் இடைத்தரகர் இல்லாமல், தாங்கள் விளைவித்ததை விற்க வழிவகை செய்தார். கிராமத்தில் இருந்து, காய்கறிகளை விவசாயிகள், அரசு பேருந்துகளில் இலவசமாக எடுத்து வரவும் வழிவகை செய்தார்.

இந்தத் திட்டத்திற்கு மூடு விழா நடத்த, பின்னர் முதலமைச்சரான ஜெயலலிதா விரும்பினாலும் பல இடங்களிலும், உழவர் சந்தை வெற்றிகரமாகவே நடந்து வருகிறது, இன்றும்.

இலவச எரிவாயு இணைப்பு திட்டம்

8கோடி இலவச கேஸ் இணைப்பு வழங்கப்படும், என அறிவித்திருக்கிறார் அருண்ஜெட்லி.

2006 – 11 ஆட்சிக்காலத்திலேயே, தமிழகத்து மகளிரின் இன்னல் களைய இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தைக் கொண்டு வந்து, வழங்கினார் கலைஞர். இந்தத் திட்டத்தை ஒட்டு மொத்தமாக பின்னர் முதல்வரான ஜெயலலிதா நிறுத்தி விட்டார்.

மருத்துவக் கல்லூரிகள்

3 மாவட்டத்துக்கு ஒரு மருத்துவகல்லூரி புதிதாக அமைக்கப்படும் என்ற திட்டத்தை அறிவித்திருக்கிறார் அருண்ஜெட்லி. அவசியமானத் திட்டம்.

2006 – 11 ஆட்சிக்காலத்திலேயே மாவட்டத்திற்கு ஒரு புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கும் திட்டத்தை அறிவித்தார் கருணாநிதி. அதன்படி கலைஞர் அறிவித்த விழுப்புரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. கருணாநிதி அறிவித்த, பெரம்பலூர்- அரியலூர் மாவட்டத்திற்கான குன்னம் மருத்துவக் கல்லூரி ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்டது.

கிராமங்களுக்கு மின் இணைப்பு

இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு தரப்படும், என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அருண் ஜெட்லி.

இது தான் மிக முக்கிய விவாதப் பொருள். இந்தியா, தமிழகத்தை விட எவ்வளவு பின்தங்கி இருக்கிறது என்பதற்கான முக்கிய சான்றே இந்த அறிவிப்புதான்.

1971 ஆம் ஆண்டு கருணாநிதி இரண்டாவது முறை முதலமைச்சராகிறார். அப்போது அவர் செயற்படுத்திய திட்டம் தான், ‘தமிழகத்தை முழுமையாக மின்மயமாக்குவது’. செய்தும் முடித்தார். தமிழகத்தின் எல்லா கிராமங்களுக்கும் மின்சாரம் சென்றடைந்தது. சரியாக 47 ஆண்டுகள் கழித்து, இப்போது தான் இந்தியா முழு மின்மயமாக்கலுக்கு தயாராகிறது.

இதற்கு பிரதமர் மோடியை குற்றம் சொல்லவில்லை. இந்தியாவின் 90 சதவீத மாநிலங்களில் இதே நிலை தான். பல கிராமங்களில் இன்னும் மின்சாரம் நுழையவில்லை. காங்கிரஸ், பா.ஜ.க உட்பட அத்தனைக் கட்சிகளும் ஆளும் மாநிலங்களில் இதே நிலைதான்.

இன்னொரு முக்கிய செய்தி. அருண் ஜெட்லியின் இந்த அறிவிப்பு, பா.ஜ.கவின் சொந்தத் திட்டம் அல்ல. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது, 2012ஆம் ஆண்டு ‘ராஜீவ்காந்தி கிராமப்புற மின்மயமாக்கல் திட்டம்’ என துவங்கப்பட்டு படிப்படியாக நடைமுறைப்படுத்தப் பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்போது இலக்கை அடையும் நிலைக்கு வந்திருக்கிறது இந்தத் திட்டம்.
2014ல் இந்தத் திட்டத்திற்கு, ‘தீன்தயாள் உபாத்யாயா கிராமப்புற மின்மயமாக்கல் திட்டம்’ என புதிய நாமகரணம் சூட்டினார் மோடி. கோயம்பேடு பேருந்து நிலையத்தை, ஜெயலலிதா திறந்து தனது திட்டம் என சொல்லிக் கொண்டக் கதைதான்.

இன்னொரு இடைக் குறிப்பும் உண்டு. 1971ல் கருணாநிதி துவங்கிய ‘முழுமின்மயமாக்கல் திட்டத்தில்’ சில குடியிருப்புப் பகுதிகள் விட்டுப் போயின (கிராமங்கள் அல்ல). அவை, போக்குவரத்து வசதி இல்லாத, தளவாடங்களைக் கொண்டு செல்ல இயலாத மலைப் பிரதேசங்கள். இது 2006ஆம் ஆண்டு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் போது கருணாநிதி கவனத்திற்கு வந்தது.

“கரெண்ட்டே இல்ல, டிவிய என்ன செய்யறது?”

“எப்படியாவது இந்தப் பகுதிகளுக்கும் மின்சாரம் சென்றடைய வேண்டும்”, கலைஞர் உத்தரவிட்டார். சூரிய ஒளி மின்சாரம் போன்ற மாற்றுத் திட்டங்கள் மூலமாக இங்கும் மின்சாரம் கொண்டு சேர்க்கப்பட்டது.

ஏதோ மோடி ஆட்சியில் மாத்திரம்தான் கருணாநிதியின் திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன என சொல்ல வரவில்லை. 2006 ஆம் ஆண்டு முதல்வர் ஆன போது கலைஞர் அறிவித்த பிரம்மாண்டத் திட்டம், ‘விவசாயிகளின் ரூபாய் 7500 கோடி கடன் ரத்து’. சொன்னபடி ரத்து செய்து, விவசாயிகள் வாழ்வில் ஒளி ஏற்றினார்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ‘ரூபாய் 65,000 கோடி’ விவசாயக் கடனை தள்ளுபடி செய்தார்.

இதே போன்று விவசாயக் கடனை ரத்து செய்யக் கோரித்தான், தமிழக விவசாயிகள் டெல்லியில் நிர்வாணமாக உருண்டு போராடியது. பிரதமர் மோடியின் மனம்தான் இறங்கவில்லை.

வீட்டுவசதித் திட்டம், இட ஒதுக்கீடு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கல், ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கச் செய்தது, பிற்பட்டோர், ஆதிதிராவிடருக்கு தனி அமைச்சகம் துவங்கி நலத்திட்டங்கள் துவங்கியது என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம், கருணாநிதியின் முன்னோடித் திட்டங்களை.

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்வி முன்னுரிமை போன்ற மற்றவர்கள் தொடத் தயங்குகிற திட்டங்களையும் செயல்படுத்திய முதல்வர் கருணாநிதிதான்.”

இவ்வாறு எஸ். எஸ். சிவசங்கர் தனது ஒப்பீட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!