தமிழுக்காக ஒரு மொய்விருந்து.. டல்லாஸ் தமிழ்ப் பெண்கள் திரட்டிய 22 ஆயிரம் டாலர்கள்! - VanakamIndia

தமிழுக்காக ஒரு மொய்விருந்து.. டல்லாஸ் தமிழ்ப் பெண்கள் திரட்டிய 22 ஆயிரம் டாலர்கள்!

HTC Flash Mob Dallas 2017

Uploaded by Padhma N on 2017-11-21.

டல்லாஸ்: ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்காக தமிழக அரசு 10 கோடி நன்கொடை அறிவித்த பிறகு மீதம் தேவைப்படும் தொகையை திரட்ட வட அமெரிக்கா முழுவதும் தமிழர்கள் பெரும் முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்.

இந்த முயற்சியில் டல்லாஸ் தமிழ்ப் பெண்கள், மொய்விருந்து நடத்தி 22 ஆயிரம் டாலர்கள் திரட்டியுள்ளார்கள். முழுக்கவும் பெண்களால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த மொய்விருந்துக்கு, அவர்கள் வீட்டு ஆண்களும் உறுதுணையாக இருந்துள்ளனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இது பற்றி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பிரவீணா தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது ”டல்லாஸில் நடைபெற்ற தெற்காசிய ஆராய்ச்சி மையத்தின் பெண்கள் பற்றிய மாநாட்டுக்கு சென்று திரும்பும் போது தான், ’மொய் விருந்து பற்றி பொறி தட்டியது. என்னுடைய தோழிகளிடம் பகிர்ந்தபோது ஐந்து பேர் உடனடியாக நல்ல திட்டம் என்று வரவேற்றார்கள்.

ஐந்து பேர் பதினைந்து பேர் ஆனோம். அப்படியே விரைவில் 50 பெண்களாக ஒன்று சேர்ந்தோம்.ஒவ்வொருத்தரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் பொறுப்புகளை பிரித்துக் கொண்டோம். எங்கள் குழுவில் இருந்த எல்லாப் பெண்களுக்கும், கைக்குழந்தைகள் முதல் பள்ளி செல்லுன் குழந்தைகள் வரையிலான குடும்பப் பொறுப்புகள் உண்டு. அவரவர் கணவன்மார்களும் இந்த முயற்சிக்கு பெரும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள் என்பதை நன்றியுடன் அனைவரும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பெயிண்டிங், கோலப்போட்டி, காய்கறியில் உருவம் செய்வது, ஃபேன்ஸி ட்ரெஸ், குழந்தைகள் குழு நடனம் என ஏற்பாடு செய்தோம்.முறுக்கு, மெது வடை, மசால் வடையுடன் டீக்கடை பெரும் வரவேற்பு பெற்றது. தமிழ்நாட்டு போலீஸ் உடையில் அங்கு வந்திருந்த ஜெய் நடேசன், ஊர்ப்பக்கத்தில் உள்ள கடைவீதியை நினைவு படுத்தினார்.

மொய்விருந்தில் முக்கியமானது உணவு தானே!. உணவுக்குழுவில் 30 பேர் பம்பரமாக சுழன்று வேலை பார்த்தார்கள். வீட்டு உணவு சப்ளை செய்யும் கேட்டரிங் நிறுவனங்களும் இணைந்து கொண்டார்கள். சாய் சுவை, சவுத் இந்தியன் ஹோம் ஃபுட்ஸ், சரிதாஸ் கிச்சன், உஷாஸ் கிச்சன் என அசத்தி விட்டார்கள். குமார்ஸ் மெஸ், பஸேரா, மால்குடி கார்டன், மதுரை தட்டுக்கடை என உணவகங்களும் ட்ரே கணக்கில் அனுப்பி வைத்தார்கள். தவிர, வீடுகளிலிருந்தும் தனிப்பட்ட முறையில் ஏராளமானோர் உணவு தயாரித்து வழங்கினார்கள்.

இட்லி சாம்பார் முதல் ராகி கூழ், சிக்கன் பிரியாணி என 26விதமான உணவுகள் இடம் பெற்று ”மொய் விருந்து” சிறப்பு படைத்தது. முதல் நாள் வரை 1000 பேர்கள் பதிவு செய்திருந்தார்கள். ஆனால் கூடுதலாக நூற்றுக்கணக்கானோர் வந்த போதும் உணவு அனைவருக்கும் தாரளமாக இருந்தது பெரும் மகிழ்ச்சியாகும்.

ஹார்வர்ட் தமிழ் இருக்கையின் க்ளோபல் ஒருங்கிணைப்பாளர் வெற்றிச்செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். குழந்தைகள் அவரை சிறப்பு செய்தனர். முன்னதாக பெண்களின் ஃப்ளாஷ்மாப் நடனம் விழாவுக்கு பெரும் உற்சாகத்தை ஊட்டியது. ’ஆளப்போறான் தமிழன்’ பாடலுக்கு விழாத் திடலில் நம் பெண்களின் நடனம் அமர்க்களமாக இருந்தது.

FUNDay என்று நாங்கள் பெயரிட்டு அழைத்த இந்த மொய் விருந்து மூலம் 22 ஆயிரம் டாலர்கள் நிதி திரட்டப்பட்டது. ரொக்கமாக, ஆன்லைன், க்ரெடிட் கார்டுமூலமாக தாராள மனதோடு தமிழ் இருக்கைக்கு நன்கொடை அளித்தார்கள்.

இதை நடத்திய பெண்கள் குழுவுக்கு மட்டுமல்லாமல், பங்கேற்ற் அனைவருக்குமே மிகப்பெரிய Signature Event ஆக அமைந்தது என்று சொல்லலாம்” – இவ்வாறு பிரவீணா தெரிவித்தார்.

ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில், தமிழுக்கு இருக்கை அமைக்க அனைத்து தமிழர்களும் ஒன்று திரண்டு முயற்சி எடுத்து வருவது வட அமெரிக்காவில் மிகவும் பாராட்டுக்குரியதாகும்

– வணக்கம் இந்தியா செய்திகள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!