Dallas Tamil Sangam's grand pongal celebration

108 பெண்கள் ஒரே டிசைன் கண்டாங்கி சேலையில் கும்மி.. டல்லாஸில் அமெரிக்காவின் அசத்தல் பொங்கல் கொண்டாட்டம்..

டல்லாஸ்: வடக்கு டெக்சாஸ் வாழ் தமிழர்கள் வாழ்வில் முக்கிய அங்கமாக கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா வெகு விமரிசையாக கொண்டாடப் பட்டது. இர்விங் SLPS சமுதாய மண்டபத்தில் பள்ளி குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் விழா தொடங்கியது. சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் அருண் குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

டல்லாஸ் வட்டாரப் பகுதியில் உள்ள 7 தமிழ்ப் பள்ளிகள் விழாவில் பங்கேற்றான. குழந்தைகள்,பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து நடத்திய தமிழ்ப் பள்ளிகளின் அணிவகுப்பு பார்வையாளர்கள் மனதை வெகுவாக கவர்ந்தது.பொங்கல் பானை,கரும்பு மற்றும் பள்ளிகளின் பதாகைகளை சுமந்து வந்த மாணவர்கள் மேடையேறியதும் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்த கரவொலியால் விழா அரங்கமே அதிர்ந்தது. மாணவர்களின் “பொங்கல் கலக்கல் ராசிபலன் “நாடகம் அரங்கத்தில் சிரிப்பலையை எழுப்பியது. கைத்தட்டல்கள் அடங்குவதற்கு வெகு நேரமானது.

பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் பங்கு பெற்ற ” நல்லதொரு குடும்பம் ” நிகழ்ச்சி குடும்பத்தில் உள்ள உறவுகளுக்கு இடையேயான புரிதலை உணர்த்தும் விதமாக அமைந்தது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் கோமாதா பூஜையில் கலந்து கொண்டனர். கல்பனாவின் ஈஷ்வர் நாட்டியாலயா குழுவின் கரகாட்டம் ,மயிலாட்டம் கும்மி என அனைத்து நாட்டுப்புற நடனங்களையும் ஒரே மேடையில் பார்வையாளர்களுக்கு மாபெரும் கலை விருந்தாக அமைந்தது. தக திமி தா நடன குழுவின் நடனம் பெரும் பாராட்டைப் பெற்றது.

தொழில் துறையில் உள்ள பெண் உரிமையாளர்களின் சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு வகையான கடைகள் ,புகைப்பட நிலையம், பொங்கலின் சிறப்பை விளக்கும் பல்வேறு கண்கவர் படங்கள் மற்றும் அலங்கார விளக்குகள் என அரங்கமே விழாக் கோலம் பூண்டிருந்தது. பிரபு ஷங்கரின் மெல்லிசை செவிகளுக்கு விருந்தாக அமைந்தது. இசைக்கப்பட்ட நாட்டுப்புற பாடல்களுக்கு பார்வையாளர்கள் உற்சாகமாக நடனமாடினார்கள் .

108 தன்னார்வலப் பெண்கள் இணைந்து கண்டாங்கி சேலை அணிந்து கும்மி நடனமாடியது வந்திருந்த அனைவரையும் கிராமத்திற்கே அழைத்து சென்றது. உறியடி போட்டி ,கரும்பு கடித்தல் போட்டி,கயிறு இழுக்கும் போட்டி மற்றும் பூ பறிக்க வருகிறோம் போட்டி என அனைத்து விளையாட்டுகளிலும் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

108 பெண்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து 21 வகையான அறுசுவை உணவு தயார் செய்து இருந்தார்கள். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வாழை இலையில் பரிமாறப்பட்டதாக விழாக் குழுவினர் தெரிவித்தார்கள் மாலை சிற்றுண்டியுடன் வந்திருந்த அனைவருக்கும் தித்திக்கும் கரும்பும் வழங்கப்பட்டது.

நிர்வாகக்குழு உறுப்பினர் குபேரன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர் . அமெரிக்காவில், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்று கூடி கொண்டாடிய முதல் தமிழர் திருநாள் பொங்கல் விழா என்பது குறிப்பிடத் தக்கது.

– வணக்கம் இந்தியா

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!