சாஸ்தா அறக்கட்டளையின் 'வளமான எதிர்காலம்'... உதவும் கரங்களுக்கு 37 ஆயிரம் டாலர் நிதி! - VanakamIndia

சாஸ்தா அறக்கட்டளையின் ‘வளமான எதிர்காலம்’… உதவும் கரங்களுக்கு 37 ஆயிரம் டாலர் நிதி!

டல்லாஸ்(யு.எஸ்): சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 7ம் ஆண்டு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் புதுமையான ‘தனி நிகழ்ச்சி’ குழந்தைகளுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அறிவு சார்ந்த விஷயங்களையும் கற்றுத் தந்தது.

டல்லாஸில் இயங்கி வரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை ஆண்டு தோறும், பல்வேறு நலத்திட்டங்களுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மொழி, பண்பாடு சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். சாதனைத் தமிழர் ஒருவரையும் அழைத்து சிறப்பு செய்வதும் வழக்கமான ஒன்றாகும்.

இந்த ஆண்டு வரவேற்பு நடனத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், அடுத்ததாக தஞ்சை பெரிய கோவில் கட்டும் போது நடந்த மூதாட்டியாரின் கதையையொட்டிய நாடகத்தை அரங்கேற்றினார்கள். இடையே சார்ந்த நடனங்களும் இடம்பெற்றது.

கோவில் கட்டுமானப் பணிகளின் போது, மூதாட்டி ஒருவர் தினம் தோறும், பணியாளர்களுக்கு நீர் மோர் வழங்கி வந்ததாகவும், கோவில் கட்டி முடிக்கும் போது ஒரு இடைவெளிக்கு தேவையான சரியான அளவிலான கல்லை அந்த மூதாட்டியார் கொடுத்த பிறகு தான் பணி நிறைவடைந்ததாகவும் கூறப்படுகிறது. அழகி என்ற பெயரில் அரங்கேறிய இந்த நாடகத்தில் முற்றிலும் குழந்தைகளே நடித்து, நடனம் ஆடியிருந்தார்கள். மூதாட்டியாக நடித்த குழந்தை, கை நடுங்கி நடித்து அசத்தி விட்டார்.

தொடந்து சிறப்பு விருந்தினர் டாக்டர் அருண் அழகப்பன் சிறப்புரை ஆற்றினார். அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கான SAT , ACT உள்ளிட்ட தேர்வுகளுக்கு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் அட்வான்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தை தொடங்கி, தலைவராக வெற்றியுடன் நடத்தி வருகிறார்.

சுமார் ஒரு மணி நேரம் பெற்றோர்கள் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு, அமெரிக்கக் கல்லூரியில் சேர்வதற்கு எப்படி தயார் செய்வது என்பதை விளக்கிக் கூறினார். இறுதியில் மாணவர்கள், பெற்றோர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நியூயார்க்கில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் அட்வான்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், ஏழை எளிய குறிப்பாக கருப்பின, ஸ்பானிஷ் இன மக்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து, ஹார்வர்ட் உள்ளிட்ட பிரபல பல்கலைக் கழகங்களில் சேர்வதற்கு உதவி செய்கிறது. பல்வேறு கல்வித் திட்டங்கள், பரிசுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

ஏழை மாணவர்களுக்கு நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் வாய்ப்பு கிடைக்கச் செய்யவேண்டும். அதற்கான நடவடிக்கைகளுக்கான நிறுவனத்தின் திட்டங்களில், தன்னுடைய நேரத்தில் பாதியை இது சார்ந்த பணிகளுக்காக செலவிடுவதாக டாக்டர் அருண் குறிப்பிட்டார்.

பொதுவாக, இத்தகைய நிகழ்ச்சிகளில் சின்னக் குழந்தைகளை சமாளிப்பது தான் பெரும்பாடாக இருக்கும். அவர்கள் வயசுக்கேற்ற இயல்புடன் விளையாட்டுத் தனமாகத் தானே இருப்பார்கள். சில நிகழ்ச்சிகளில் ’தற்காலிக குழந்தைகள் காப்பகம்’ அமைக்கப்படும்.

இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சியில், 5 வயது முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரத்யேகமான அறிவு சார்ந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சக் ஹோகன் சுமார் ஒன்றரை மணி நேரம் குழந்தைகளை கலகலப்பூட்டி, அருமையான வாழ்க்கைத் தத்துவங்களை எளிதில் புரியும்படி கற்றுத் தந்தார். குழந்தைகளுடன் குழந்தைகளாக சக் ஹோகனும் பாடி, விளையாடி குதூகலம் ஊட்டினார்.

‘தன்னைத் தானே அறிந்து கொண்டடு தனக்கு உண்மையாக இருந்து கொண்டால் உலகையே வெல்ல முடியும்’ போன்ற ஆழ்ந்த சிந்தனைகளை 5 வயது குழந்தையும் புரிந்து கொள்ளச் செய்தார். சக் ஹோகன் 20 ஆண்டுகளுக்கு மேலாக சாதிக்கத் தூண்டுவதற்கான ஊக்கமளிக்கும் ‘சிறப்பு பேச்சாளராக’ இருக்கிறார். பல பிரபல நிறுவன சிஇஓ -க்களுக்கு ‘தனிப்பட்ட ஆலோசகர்’ஆகவும் பணியாற்றி வருகிறார். அத்தகைய அமெரிக்க பேச்சாளருடன் குழந்தைகளுக்கு கிடைத்த நேரம் அளப்பரியது.

இந்த ஆண்டு திரட்டப்பட்ட தொகை மூலம் 37 ஆயிரம் டாலர்கள் உதவும் கரங்கள் அமைப்பு மூலம் செயல்படும் காயத்ரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கும், 5 ஆயிரம் டாலர்கள் டெக்சாஸ் புயல் நிவாரணப் பணிகளுக்கும், 5 ஆயிரம் டாலர்கள் 11 வது ஆண்டு திருக்குறள் போட்டிக்கும் நிதியுதவி வழங்கப் பட்டது.

கலை நிகழ்ச்சிகள், பெரியவர்கள் மாணவர்களுக்கு தேவையான உயர்கல்வி பற்றிய தகவல்கள், குழந்தைகளுக்கு அறிவுச்செறிவூட்டும் சிறப்பு நிகழ்ச்சி என புதுமையான விழாவாக அமைந்தது.

‘நேரம் கிடைப்பது’ என்பது அரிதாகிவிட்ட வேளையில், கிடைக்கும் நேரத்தை பல் நோக்குடன், அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது முன் மாதிரியாக விளங்கியது.

ஏனைய அமைப்புகளும், அமெரிக்கா மட்டுமல்ல தமிழகத்திலும் செய்து இத்தகைய முயற்சிகளை செய்து பார்க்கலாமே!

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!