சென்னை: இந்தி பட உலகை அலற வைத்த பாலியல் புகார்கள் இப்போது தமிழ் திரையுலகையும் தாக்க ஆரம்பித்து உள்ளது. கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளார். வைரமுத்து பிற பெண்களிடம் எப்படி தவறாக நடந்துக்கொண்டார் என்பதையும் ட்விட்டரில் பதிவு செய்து வருகிறார். ஆனால் மறுப்பு தெரிவிக்கும் வகையில் வைரமுத்து விளக்கமளித்தார். ஆனால் வைரமுத்து விளக்கத்தை பார்த்த பாடகி சின்மயி, அவர் ‘பொய்யர்’ என்று பதில் கருத்தை பதிவிட்டார்.
மேலும் வைரமுத்து மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
இந்தநிலையில், “பாடகி சின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யானது” என்று வைரமுத்து வீடியோ பதிவு மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
அந்த வீடியோவில், “என் மீதான புகார் உண்மையாக இருந்தால் வழக்கு தொடரலாம். சந்திக்க தயாராக இருக்கிறேன். நான் நல்லவனா? கெட்டவனா? என்பதை இப்போது யாரும் சொல்ல வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன்.
சின்மயி வழக்கு தொடர்ந்தால் அதனைச் சந்திக்க தயார். சின்மயி கூறிய குற்றச்சாட்டு, முழுக்க முழுக்க பொய்யானது. உள்நோக்கமுடையது. பாலியல் புகார் தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் கடந்த ஒரு வாரமாக ஆலோசனை நடத்தினேன்,” என்று அதில் கூறியுள்ளார்.
– வணக்கம் இந்தியா