போவோமா கலிஃபோர்னியா - ஒரு மினி பயணத்தொடர் - 5 - VanakamIndia

போவோமா கலிஃபோர்னியா – ஒரு மினி பயணத்தொடர் – 5

‘சாஸலீடோ’விலிருந்து திரும்பி மீண்டும் எங்களது கோல்டன் கேட் பிரிட்ஜ் பயணம்.முதலில் க்ருஸில் ஏறினோம்.பிரிட்ஜ் டு பிரிட்ஜ் டபுள் டக்கர் க்ருஸில் பயணம்,,பாதி திறந்த வெளியும்,பாதி மூடிய அறையாகவும் க்ரூஸ் இருந்தது.அன்று மிகவும் குளிர்.பனிமூட்டம் படர்ந்து மிகவும் அழகாய் இருந்தது. ஹெட்செட்டை காதில் போட்டுக்கொண்டு,க்ருஸில் திறந்த வெளியில்,பிரிட்ஜின் அருமை பெருமைகளை கேட்டபடி,அதை சுற்றி சுற்றி வந்தது மறக்கவே முடியாது.

ஒரு ரசிகை, ஒரு அழகான ஓவியத்தை ரசிப்பதைப் போல உணர்ந்தேன். இந்த நிமிடம்,உலகப் புகழ் பெற்ற ஒரு இடத்தை ரசித்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை பார்க்காத,பார்க்க வரமுடியாத என் உறவுகளுக்காகவும் சேர்த்தே என் கண்கள் ரசித்தன !

ஜனவரி 5 ,1933 ல் கட்ட திட்டமிடப்பட்டு,1937 ல் முடிக்கப்பட்டு, இன்னும் சில வருடங்களில் நூற்றாண்டை தொடப் போகும் இந்த பாலம் ,எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல்,ஒரு வரலாறாக உறுதியாக நிற்கிறது!

இத்தனை குளிரிலும் என் குழந்தை, ஓடி ஓடி வீடியோ எடுத்ததும்,முன்பின் தெரியாத ஒரு கொரியா சுற்றுலா பெண்,என்னிடம், “உனக்கு குளிரவில்லையா,நீ ஜாக்கெட் அணியவில்லையே, நான் 2 ,3 போட்டுக் கொண்டிருக்கிறேன், தரவா,?” என தன் ஜாக்கெட்டை கொடுக்க முன் வந்தது,இவை எல்லாம் இனிமை,,இனிமை.!

க்ரூஸ் விட்டு மனமில்லாது இறங்கி, பையர் 39 க்கு வந்து,அங்குள்ள ரோடு ஷோக்களை பார்த்தோம்.மனம் திருப்தியுடன் பசி வயிற்றைக் கிள்ள, டின்னருக்கு கிளம்பினோம். முதலில் ‘உடுப்பி’யில் சாப்பிட எண்ணி, பார்க்கிங் பண்ணமுடியாததால்,நேரே ‘மதுரை இட்லி கடை’க்குப் போனால்,மிகவும் கூட்டம்.பசி வேறு,காத்திருக்க பொறுமை இல்லாமல், ‘மெட்றாஸ் கஃபே’ போய் சாப்பிட்டோம். மிக நன்றாக இருந்தது ! பிறகு தாங்கும் ஹோட்டலுக்கு திரும்பி,நல்ல ரெஸ்ட் !

ஒன்பதாம் நாள், ஹோட்டலில் இருந்து ஒன்னரை மணிநேர பயணத்தில் ‘மியூர் வுட்ஸ் நேஷனல் பார்க்’. இங்கே ரெட் வுட் மரங்கள் மிகவும் பிரபலம். காரை பார்க் செய்துவிட்டு, டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்றால், அடேயப்பா!.மிக மிக பிஸியான ‘சான் பிரான்சிஸ்கோ’வில் இப்படிப்பட்ட இடமா?என ஆச்சரியம் !எங்கும் மரங்கள்!எதிலும் மரங்கள்!

180 அடி உயரமுள்ள மரத்தை, அதன் உச்சியை பார்க்கவே முடியவில்லை. அசந்து நின்றபோது,ஒருவர், “உள்ளே இதைவிட 100 அடி கூடுதலான மரம் உள்ளது” என்றார்.உள்ளே ஆயிரக்கணக்கான செந்நிற மரங்கள்! 1000 ,2000 வருடங்களுக்கு முந்திய மரங்கள்! ஒரு மரத்திலிருந்து மில்லியன் கணக்கில் விதைகள் விழுந்தாலும்,ஒரு சில விதைகளே மரமாகும் பக்குவம் அடையுமாம்!. அப்படி வளர்ந்த மரங்கள்தான் இவைகள் ! வாக்கிங் ட்ரைல்ஸ் நிறைய இருக்கிறது.சூரிய ஒளி அதிகம் நுழைய முடியாத நெருக்கமான மரங்கள்! நல்ல சுத்தமான காற்றை சுவாசித்துவிட்டு எங்கள் இருப்பிடம் திரும்பினோம்.

என் பெண் ‘சாட்’ சாப்பிட வேண்டும் என ஆசைப்படவே, ‘இந்தியன் சாட் குஸின்’ போனோம்.பானி பூரி,பேல்,வெஜிடபிள் பக்கோடா அனைத்தும் மிகவும் டேஸ்ட்டாக இருந்தது.இரவு உணவு முடித்து ரூமுக்கு திரும்பினோம்.

பத்தாம் நாள், ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ளலாம் என முடிவு செய்து, பின்னர் ‘சன்னிவேல்’ முழுவதும் சுற்றலாம் என்ற பிளானை மாற்றிக் கொண்டோம். முதலில் ‘ஆரக்கள்’ ஆபீஸ் பார்த்தோம். ஐந்து, ஆறு மிகப் பெரிய கட்டிடங்கள். ஒரு ஏரி முன்புறம் இருக்க, அந்த ஏரியில் சில அன்னங்கள் ஒயிலாக மிதந்த படி இயற்கை எழிலில் பார்க்க அழகாய் இருந்தது. பிறகு,’ஏர் மியூஸியம்’ சென்று பார்த்தோம்.

அங்கிருந்து பாபா கோவில்-‘ஷீர்டி சாய் தர்பார்’ சென்றோம். சரியாக மதியம் 12 மணி என்பதால், ஆரத்தி தரிசனம் முடிந்து, திருப்தியாக வெளியே வந்தோம்.லஞ்சிற்கு ‘ஆனந்த பவன்’. பின் ஹோட்டல் திரும்பி, நாளையோடு எங்கள் டூர் முடிவதால்,பேக் பண்ண ஆரம்பித்தோம்.எல்லாம் ரெடி பண்ணிவிட்டு, நைட் வியூ அழகில் ஜி ஜி பிரிட்ஜ் பார்க்க கிளம்பி,வழியில் டின்னரும் முடித்தோம்.

இரவில் இந்த பாலத்தில் பயணிப்பது, அற்புதமான விஷயம்!! கார்த்திகை தீபம் போல இரு பக்கமும் லைட் வெளிச்சத்தில், என்ன ஒரு அழகு !.பாலம் தாண்டியதும் ‘விஸ்தா பாயிண்ட்’ உள்ளது.அங்கு சென்று தூரத்தில் நின்று முழு அழகையும், கீழே கடல்,மேலே கருநீல வானம், ஒளிரும் விளக்குகளுடன் வரலாற்று சிறப்புமிக்க இந்த பாலம் ! கலையை ரசிக்க தெரிந்த அனைவருக்கும் இது ஒரு விருந்து !காலைவேளையில் பலமுறை பார்த்த இந்த பாலம் ,இரவில் வித்தியாசமாக இருந்தது. வீடியோ, போட்டோக்களில் அதனை அள்ளிக் கொண்டு மனசே இல்லாமல் ரூம் திரும்பினோம்.நல்ல தூக்கம்.

பதினொன்றாம் நாள், காலையில் சீக்கிரமே எழுந்து, பிரேக் பாஸ்ட் முடித்து ,6 :15 க்கு காரில் கிளம்பினோம்.’ சன்னிவேல்’,சான் பிரான்சிஸ்கோ, அனைத்து ரெஸ்ட்டாரெண்ட்டுகளுக்கும் ‘தேங்க் யூ’ சொல்லிவிட்டு,ஐந்தரை மணிநேர பயணத்தில் ‘லாஸ் ஏஞ்சல்ஸ்’ வந்தோம். காரை ட்ராப் செய்துவிட்டு,ஏர்போர்ட் சென்றோம்.செக் இன் முடித்து சாப்பிட்டுவிட்டு, பிளைட்டில் ஏறியதும்,மனம் கடந்த 10 நாட்களையும் அசை போட்டது.

அருமையான,எந்த ஒரு சிரமமும்,சிக்கலும் கொடுக்காத,ஒரு நல்ல சுற்றுலா முடிந்த ஓர் அழகான அலுப்புடன் ஊர் திரும்பினோம் ! கடவுளுக்கு நன்றி ! இதை படித்த,உங்களுக்கு நன்றி. உங்கள் கலிஃபோர்னியா பயணத்திட்டத்திற்கு தகவல்கள் உதவியாக இருந்தால் மகிழ்ச்சி!

மீண்டும் மற்றுமொரு பயணத்துடன் தொடர்கிறேன்.

– ஷீலா ரமணன், டெக்சாஸ்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!