ஜியோவுக்கு எதிராக அதிரடியாகக் களமிறங்கிய பிஎஸ்என்எல்... ஏகப்பட்ட டேட்டா சலுகை! - VanakamIndia

ஜியோவுக்கு எதிராக அதிரடியாகக் களமிறங்கிய பிஎஸ்என்எல்… ஏகப்பட்ட டேட்டா சலுகை!

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்ற பெயரில் 4ஜி சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த சூழலில் மத்திய தொலைதொடர்பு சேவை நிறுவனமான பிஎஸ்என்எல் ரூ.249-க்கு மாதம் 300 ஜிபி அளவுக்கு இணையத்தை பயன்படுத்திக்கொள்ளும் சேவையை இன்று அறிமுகம் செய்துள்ளது.

இந்திய தொலைதொடர்பு சந்தையில் ‘ரிலையன்ஸ் ஜியோ’வின் வருகை மற்ற அனைத்து தொலைதொடர்பு சேவை நிறுவனங்களுக்கும் சவாலான ஒன்றாகவே உள்ளது. போட்டியாளர்களுக்கு இணையாக கட்டணச் சலுகையில் சேவைகளை வழங்கவும், தொலைதொடர்பு சந்தையில் நீடித்து இருக்க ஜியோவிற்கு இணையான கட்டணத்தில் சேவை வழங்கும் விதமாக பி.எஸ்.என்.எல். ‘Experience Unlimited Broadband 249’ திட்டத்தை இன்று அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, 1 ஜிபி இணைய சேவையை ரூ.1-க்கும் குறைவான செலவில் பயன்படுத்த முடியும். இணைய பயன்பாடு 300 ஜிபியை தாண்டினாலும், ஒரு ஜிபி இணையத்துக்கான கட்டணம் ரூ.1-க்கும் குறைவாகவே கணக்கிடப்பட்டு, மொத்த பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் விதிக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘Experience Unlimited Broadband 249’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் புதிதாக பிராட்பேண்ட் சேவையைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். ரூ.249-க்கு மாதம் 300 GB இண்டர்நெட் சேவை என்பது பி.எஸ்.என்.எல் இதுவரை அறிவித்த இண்டர்நெட் சேவைகளிலேயே மிகவும் குறைவான கட்டணத்தைக் கொண்டதாகும்.

இனிமேல் புதிதாக பிராட்பேண்ட் சேவையை பெறும் வாடிக்கையாளர்கள் முதல் 6 மாதங்கள் ரூ.249-க்கு சேவையை பெறலாம். அதற்கு பிறகு இந்த சேவைக்கு ரூ.499 செலுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் இணைய சேவையில் நிறைய வாடிக்கையாளர்களை சேர்க்கும் முயற்சியாக நாடு முழுவதும் ‘Experience Unlimited Broadband 249’ திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (செப்.9) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சவால் என்று வரும்போது பி.எஸ்.என்.எல். எப்போதும் அதைச் சமாளிக்கும் வலுவுடன் இருந்து வருகிறது. ரிலையன்ஸ் ஜியோவிற்கு இணையாக கட்டணச் சலுகைகளை வழங்குவதில் பி.எஸ்.என்.எல் போட்டியாளராக விளங்கும். குறிப்பாக, ஏற்கனவே லேண்ட்லைன், ஆப்டிக்கல் ஃபைபர் நெட்வொர்க்கில் வலுவாக இருப்பதால் புதிதாக முதலீடு செய்து சலுகைகளை வழங்க வேண்டிய நிலை பி.எஸ்.என்.எல்-க்கு இல்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அறிவிப்பெல்லாம் ஓகே… அப்படியே சர்வீஸிலும் கவனம் செலுத்தினால்… ஜியோ என்ன, அதன் தாத்தனே வந்தாலும் பிஎஸ்என்எல்லை மிஞ்ச முடியாது!

Author: admin
Tags

Similar posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!