சான் அண்டோனியோவில் ’அடுத்த தலைமுறை’யுடன் ஒரு பாரதியார் விழா..! - VanakamIndia

சான் அண்டோனியோவில் ’அடுத்த தலைமுறை’யுடன் ஒரு பாரதியார் விழா..!

சான் அண்டோனியோ: டிசம்பர் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சான் அண்டோனியோ தமிழ் சங்கம் சார்பில் மகாகவி சுப்ரமணிய பாரதியின் 135 வது பிறந்தநாள், விழா மிகச் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மகேஷ் விஸ்வநாதன் வரவேற்புரை ஆற்றி விழாவை தொடங்கி வைத்தார். பாரத சமுதாயம் வாழ்கவே என சிறு குழந்தைகள் அழகாக பாடத்துவங்கினர். அடுத்து அழகழகான சின்னஞ்சிறு சிறார்களின்,’ஓடி விளையாடு பாப்பா’ என்ற நடனம் இடம் பெற்றது.

‘முருகா,முருகா’வென உருகி, யாதுமாகி நின்று, ‘தேடி உனை சரணடைந்தேன்’ என பாரதியை சரணடைந்த நேரம்,பாரத தேசம் பாடி அவையை நிமிரச் செய்தான் சிறுவன். சான் அண்டோனியோ தமிழ் சமுதாயமே மிகவும் பெருமையாக கொண்டது,அடுத்த தலைமுறைக்கும் பாரதியை காட்டிவிட்டோமென்று !

பாரதியின் கவிதை பாராயணமும், ஒளி படைத்த கண்ணினாயை அழைத்ததும், அவரின் துடிப்புமிக்க சிவசக்தி கூத்துப் பாடலும், நெஞ்சை நிமிர்த்திய ‘வந்தே மாதரமும்’ சிலிர்ப்பூட்டியது. ’தேன் வந்து காதிலே பாய்ந்த’ இனிமையான பியானோ இசையும்,குரும்புக் கண்ணனின் தீராத விளையாட்டும் சுறுசுறுப்பாக்கியது.

நம்மை உயிர்த்தெழச் செய்யும் ‘ஓம் சக்தி ஓம் சக்தியும்’ மெய்மறக்கும் வீணையில் எழுந்தது. பாரதியின் வாழ்க்கை சரித்திரத்தில் சில உன்னதமான,சுவாரசியமான நிகழ்வுகளும்,பாடலும் சேர்ந்த ‘இயலும்,இசையும்’, என கொண்டாடித் தீர்த்தோம் !

பாரதியே,! நீர் விரும்பிய தமிழோசை உலகமெல்லாம் பரவச் செய்ய அணைத்து தமிழர்களும் ‘ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்க்கு நிதியுதவி செய்துவருகிறோமல்லவா, அதற்காக, ஆத்ரேயா பக்தவத்சலம் அவர்களும்,அவரது மனைவியாரும் பத்தாயிரத்து எட்டு ($10008) அமெரிக்க டாலர்கள் நிதியுதவி தந்து சிறப்பு செய்தனர் !

தலைவர் ராஜகுரு நன்றியுரை முடிக்க,வந்திருந்த அனைவரும் பாயாசத்துடன் கூடிய விருந்து உண்டு பாரதியை மனதில் ஏற்றி விடை பெற்றோம்.

”ஒரு சொல் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் -தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர் !!”

“தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்
பரவும் வகை செய்தல் வேண்டும் ”

என்று சொன்ன பாரதியின் கனவு நனவாகி விட்டது! வட அமெரிக்காவில் தமிழோசை பரவியாகி விட்டது !

-ஷீலா ரமணன்,.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!