அட்லாண்டாவில் டிசம்பர் ‘தமிழ்’ மாதம்... அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்பு! - VanakamIndia

அட்லாண்டாவில் டிசம்பர் ‘தமிழ்’ மாதம்… அதிகாரப்பூர்வ அரசு அறிவிப்பு!

அட்லாண்டா: அமெரிக்காவின் முக்கிய மாநகரங்களில் ஒன்றான அட்லாண்டா மாநகரப் பகுதியில் உள்ள குவினெட் கவுண்டியில் டிசம்பர் மாதம், தமிழ் மாதமாக அனுசரிக்கப்பட்டுள்ளது

அதற்கான பிரகடனத்தை கவுண்டி சேர்மன் சார்லட் ஜே நேஷ் அவையில் வெளியிட்டார். மாதம் தோறும் நடைபெறும் கவுண்டி அவைக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சேர்மன் சார்லட் தனது பிரகடனத்தில், தமிழ் மொழி மற்றும் தமிழர்களைப் பாராட்டியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது.

”குவினெட் கவுண்டியில் வசிக்கும் தமிழர்கள், கவுண்டியின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாட்டைப் பேணிக்காக் பெருமளவு பங்களித்துள்ளார்கள்.

தமிழ் மொழி உலகின் ஏழு செம்மொழிகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். நீண்ட காலமாக நீடித்து நிலைத்து இருக்கும் மொழியுமாகும்.

76 மில்லியன் மக்கள் பேசும் , உலகில் அதிகமாகப் பேசப்படும் 20 வது மொழியாக தமிழ் விளங்குகிறது. இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் அரசு மொழியாகவும் இருக்கிறது.

தொன்மையான தமிழ் மொழி ஆராய்ச்சிக்காகவும் மற்றும் ஆராய்ச்சியாளர்களை உருவாக்கவும் , ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கான, முயற்சியில் குவினெட் கவுண்டி தமிழ் சமுதாயம் பெரும் பங்காற்றுகிறது.

2500 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான பாரம்பரியமிக்க தமிழ் மொழியின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் குவினெட் கவுண்டியின் மக்களுக்கு எடுத்துரைக்க, கவுண்டியின் தமிழ் சமுதாயம் பெரும் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

கவுண்டியின் மேலாண்மை இயக்குனர்கள் குழுவின் தலைவர் என்ற முறையில் கவுண்டியின் தமிழ் சமுதாயம், தமிழ் மொழிக்காக எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டுகிறேன்“ என்று பிரகடனத்தில் கூறியுள்ளார்.

சேர்மன் தனது உரையில் டிசம்பர் மாதம் தமிழ் மாதமாக குவினெட் கவுண்டியில் அனுசரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

ஹார்வர்ட் தமிழ் இருக்கை அட்லாண்டா குழு மற்றும் அட்லாண்டா மாநகர தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கண்ணப்பன், சுவாமிநாதன், ஜெயமாறன், வெற்றிச்செல்வன், நஸீரா, ஹரி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

– வணக்கம் இந்தியா செய்திகள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!