கல்வித் தரத்திற்கு ஆசிரியர்கள் மட்டுமே பொறுப்பானவர்களா? - VanakamIndia

கல்வித் தரத்திற்கு ஆசிரியர்கள் மட்டுமே பொறுப்பானவர்களா?

சமீபகாலத்தில் ‘கல்வித் தரம்’ என்ற வார்த்தை அதிகமாக பேசப்படுகிறது. முன்பை விட கல்வித் தரம் குறைந்து விட்டது என்று சொல்லலாம் தான். ஆனால், அதற்கு ஆசிரியர்களும் கல்வி நிறுவனங்களும் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது.

கற்றுத் தருவதற்கு தேவையான திறனும், ஆற்றலின் தேவையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆசிரியர்களுக்கு தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புகள் கிடைப்பதே இல்லை.

முதலில் கல்வித் தரம் என்றால் என்ன என்று பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் எஸ்எஸ்எல்சி படித்தவர்கள் கூட ரயில்வே போன்ற துறைகளில் உயர்பதவியில் மேலாளர்களாக பணி புரிந்தார்கள். இப்போது எம்பிஏ படித்தவர்களுக்குக் கூட எளிதில் மேலாளர் பதவி கிடைப்பதில்லை. அதாவது, ஒவ்வொரு காலக் கட்டத்திற்கும் தேவைக்கு ஏற்ப கல்வியின் தரத்தையும் மேம்படுத்திக் கொள்வது தான் கல்வித் தரம்.

இன்றைக்கு, நாள் தோறும் ஒரு டெக்னாலஜி என்று மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வேகத்திற்கேற்ப, மாறிக்கொண்டிருக்கும் டெக்னாலஜி, துறை சார்ந்த எதிர்பார்ப்புகள் ஆகியவற்றிற்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு, கல்வி நிறுவனங்களாலும் ஆசிரியர்களாலும் செயல்பட முடியாது என்பது தான் உண்மை. பாடத்திட்டங்களையும் அத்தனை வேகமாக மாற்றவும் முடியாது.

சம்மந்தப்பட்ட துறை சார்ந்த நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு, மாறி வரும் மாற்றங்களுக்கு ஏற்ப பயிற்சி கொடுப்பது தான் சரியானது. ஆனால் அதை அவர்கள் செய்யாமல், கல்வி நிறுவனங்களிடம் அந்தப் பொறுப்பை தள்ளிவிடப் பார்க்கிறார்கள். அவர்களையும் குறை சொல்ல முடியாது. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்கான எதிர்கால திட்ட வடிவமைப்பதற்கே, அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை.

அசுரவேக டெக்னாலஜி மாற்றங்கள் தான் இது எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம், அடுத்த தலைமுறைக்கு தேவையான திறமையாளர்களை பயிற்றுவிப்பது அதிகப்படியான செலவாகவும் அமைகிறது. அதனால் நிறுவனங்கள், புதிய திறமைகளை கல்வி நிலையங்களிலேயே எதிர்பார்க்கிறார்கள்

ஸ்மார்ட்டான மாணவர்கள், தாங்களாகவே புதிய தொழில் நுட்பங்களுக்கு தயார் படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், கல்வி நிறுவனங்களிலோ மாணவர்களின் மதிப்பெண்களுக்குத் தான் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. புதியதை கற்றுக் கொள்வதற்கு அங்கு இடம் இல்லை.

அறிவை மதிப்பிட வழிமுறைகள் குறைவு. அதனால் மதிப்பெண்கள் மூலம் ஒருவரை மதிப்பிடுகிறார்கள். அது தான் வேலையைப் பெற்றுத் தரவும் செய்கின்றன. ஆகவே, வேலை நோக்கி, அனைவரும் மதிப்பெண்களுக்காக நேரத்தை செலவிடுகிறார்கள். அதற்குரிய பாடத்திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள். தங்களின் தனிப்பட்ட விருப்புகள், ஆர்வம் பற்றி சிந்திப்பதே இல்லை.

இந்த தலைமுறை பெற்றோர்களும், பிள்ளைகளுக்கு வாழ்க்கையின் எதார்த்தத்தை சொல்லித் தருவதில்லை. வேலை, அதற்கான படிப்பு என்ற இரண்டையும் மட்டும் தான் பிள்ளைகளிடம் போதிக்கிறார்கள்.

நம்முடைய மீடியாவும் எப்போதும் எதிர்மறையான கருத்துக்களையே விதைக்கிறார்கள். புதிதாக சிந்தித்து, ஆக்கப்பூர்வமாக செயல்படுபவர்கள் கேலிக்குள்ளாகிறார்கள். அவர்களின் முயற்சிகளுக்கு ஆதரவு இல்லையென்றாலும் ஏளனப் படுத்தாமலாவது இருக்கலாம்.

ஆக, இந்த சமூகத்தில் புதிய சிந்தனையாளர்கள் வெற்றி பெறுவதற்கு, தேவையற்ற இடைஞ்சல்கள் ஏராளம் இருக்கிறது. அதுவும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு இல்லாமல் செய்து விடுகிறது.

புதிய தேவைகள் நாள் தோறும் பெருகிக் கொண்டே வரும் வேளையில், தொழில் துறையும் , புதிய திறமைகளை வளர்ப்பதில்லை. கல்வி நிறுவனங்களிலும் அந்த வாய்ப்பு இல்லை. சமூக சூழலும் அத்தகைய வாய்ப்புகளை ஊக்கப்படுத்துவதில்லை. ஆகையால் தான் நாம் கல்வித் தரத்திலும் பின் தங்கி விட்டோம்.

அதே வேளையில், புதிய வாய்ப்புகளை கண்டறிந்து, தாங்களாகவே தங்களை செதுக்கிக் கொள்ளும் ஸ்மார்ட் இளைஞர்கள் வேகமாக முன்னேறி விடுகிறார்கள். மற்றவர்கள் பின் தங்கி விடுகிறார்கள்.

முதலில் ஒவ்வொருவரும் தங்களுக்கு எந்த துறையில் ஆர்வம் என்று தெரிந்து கொண்டு அதில் பயணிக்க முன் வரவேண்டும். அந்த துறை சார்ந்த விஷயங்களை முழுமையாக கற்றுக் கொண்டு, புதிய தொழில் நுட்பங்களுக்கு தயார் செய்து கொள்ள வேண்டும்

மாறி வரும் உலக மாற்றங்களுக்கு ஏற்ப நமது சிந்தனைகளையும் செயல்களையும் மாற்றா விட்டால் ஒழிய ‘ கல்வித் தரம்’ பற்றி பேசுவது வீண் வேலையே!

– ஏ.ஜே. பாலசுப்ரமணியன்

குறிப்பு: கட்டுரையாளர் ஏ.ஜே.பாலசுப்ரமணியன், பிரபல அமெரிக்க சுகாதாரத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்தியப் பிரிவுக்கு, மேலாண்மை இயக்குனராக தலைமை ஏற்று நடத்துகிறார். 33 ஆண்டுகளுக்கு மேலாக கணிணித் துறையில் பல்வேறு பொறுப்புகள் வகித்து வருகிறார். பல ’ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியுள்ளார். மனிதவள மேலாண்மையிலும், இணையான அனுபவம் கொண்டவர். இளைஞர்கள் ‘முதல் வேலை’யை எப்படிப் பெறலாம் என்பதற்கு வழிகாட்டியாக ‘ GET YOUR FIRST JOB’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். மேலும் பல தளங்களில் இளைஞர்களை ஊக்குவித்து வருகிறார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *