டிஜிட்டல் இந்தியாவின் மத்திய அரசே! தமிழர்களின் உயிர் மலிவானதா? - VanakamIndia

டிஜிட்டல் இந்தியாவின் மத்திய அரசே! தமிழர்களின் உயிர் மலிவானதா?

ஓகி புயலால் காணாமல் போன 740க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை தேடாமல் மெத்தனப் போக்கு கடைப்பிடிக்கும் மத்திய அரசே. தமிழர்களின் உயிர் மலிவானதா.

தமிழக மீனவர்கள் காணாமல் போய் 12 நாட்களுக்கு மேல் ஆகியும், இப்போது தான் ஒரே ஒரு கப்பலை அனுப்பியுள்ளனர். அதை மிகவும் பெருமையாக சொல்கிறார் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்.

டிஜிட்டல் இந்தியா என்று தம்பட்டம் அடிக்கும் மத்திய அரசிடம் விமானப்படை, சாட்டிலைட்கள், கடற்படை அதிவேக படகுகள் என வேறு எதுவுமே இல்லையா? கோடிக்கணக்கான ரூபாய் மக்களின் வரிப்பணத்தை வாரி இறைத்து நவீன கருவிகளை வாங்கியும், உற்பத்தி செய்தும் குவிக்கிறது மத்திய அரசு. விண்வெளிக்கு ராக்கெட்டுகளாக அனுப்பித் தள்ளுகிறார்கள்.

இவ்வளவு தொழில் நுட்பம் வாய்ந்த டிஜிட்டல் இந்தியாவில்,
குறைந்த பட்சம், இஸ்ரோ விஞ்ஞானிகள் துணையுடன், சாட்டிலைட் மூலமாகவது எங்கு இருக்கிறார்கள் மீனவர்கள் என்று கூட தேடமுடியாதா?. காணாமல் போனது ஒருவரோ இருவரோ அல்ல, 740 பேர் விசைப்படகுகளில் சென்றுள்ளார்கள். 100 கடல் மைல்களுக்கு அப்பால் தேடுவதற்கு இந்தியாவிடம் எந்த தொழில் நுட்பமும் இல்லையா என்ன?

மீனவர்கள் கடலுக்குப் போவது அரசுக்கு தெரியாதா? என்னென்ன தொழில் நுட்பங்கள் இருப்பதாக ஜம்பம் அடிக்கிறார்கள். மீனவர்களுக்கு முன் கூட்டியே எச்சரிக்கை கொடுத்து, கடலுக்குச் செல்லாமல் தடுக்க முடியாதா?. அரசின் கவனக் குறைவால், அறிவிப்பு ஏதும் இல்லாத காரணத்தால் கடலுக்குச் சென்று தத்தளிக்கும் மீனவர்களை போர்வேகத்துடன் மீட்க வேண்டியது அரசின் கடமை அல்லவா. ஒரு உயிர் ரெண்டு உயிர் அல்ல, 740 பேர்களுக்கும் மேலான இந்திய குடிமக்கள்.

காணாமல் போனவர்கள் பற்றி, இருக்கிறார்களா அல்லது மரணமடைந்து விட்டார்களா என்று எந்த விவரமும் தெரியவில்லை. முதல்வருக்கோ, பாதிப்படைந்த உறவினர்களை சந்தித்து ஆறுதல் சொல்லக் கூட நேரம் இல்லை. அமைச்சர் போதாதா? முதல்வர் ஏன் போகனும்ன்னு இன்னொரு அமைச்சர் ஜெயகுமார் ஆணவமாக கேட்கிறார். அப்புறம் எதுக்கு முதல்வர்ன்னு ஒருத்தர் இருக்கிறார்.

கடந்த ஆண்டு கொத்து கொத்தாக விவசாயிகள் தற்கொலை செய்த போது, வெறும் 17 பேரை கணக்கு காட்டியது தமிழக அரசு. தற்போது எத்தனை மீனவர்கள் கடலுக்கு போனார்கள் என்ற கணக்கும் அரசிடம் இல்லை. மும்பை, கொச்சின் உட்பட வேறு பகுதிகளுக்கு எத்தனை பேர் திரும்பினார்கள் என்ற கணக்கும் இல்லை. குறைந்த பட்சம் 100 பேராவது மரணமடைந்திருக்கக் கூடும் என்று மீனவ சமுதாய மக்கள் கணக்கிடுகிறார்கள். அரசோ எல்லாவற்றையும் மூடி மறைக்கத் தான் முயற்சி செய்கிறது.

தன் குடிமக்கள் மீது டிஜிட்டல் இந்தியாவின் அக்கறை இவ்வளவு தானா? அல்லது மீனவர்கள் போன்ற அடித்தட்டு மக்கள் டிஜிட்டல் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா? 12 நாட்கள் கழித்து ஒரே ஒரு கப்பலை மட்டும் அனுப்பி விட்டு பெருமை பேசும் அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், அரசு இதுவரையிலும் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றி அறிக்கை வெளியிட வேண்டும்.

தமிழக அமைச்சர்கள் வாக்கு கேட்டு ஆர்கே நகரில் அழுது புரள்கிறார்கள். மீனவ மக்களையும் உள்ளடக்கிய ஆர்கே நகர் வாக்காளார்களே. சக தமிழர்கள் கடலில் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எந்தக் கவலையும் இல்லாமல் வாக்கு வேட்டை ஆடும் அரசியல் வாதிகளை வாக்குச் சீட்டு மூலம் தண்டியுங்கள்

ஜப்பான் முதல் அமெரிக்கா வரை வசிக்கும் மனித உள்ளங்களே.. காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க ஒருமித்த குரல் கொடுங்கள். டிஜிட்டல் உலகத்திலும் மனித நேயம் இன்னும் இருக்கிறது என்று அரசுகளுக்கு காட்டுவோம். ஒன்று திரள்வோம். சகோதர மீனவர்களை காப்போம்..

– கவிதா பாண்டியன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!