ஆன்லைன் வர்த்தகம் : பேபால் போன்ற இடைத் தரகர்கள் தேவை தானா? - VanakamIndia

ஆன்லைன் வர்த்தகம் : பேபால் போன்ற இடைத் தரகர்கள் தேவை தானா?

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்காவிலும் க்ரெடிட் கார்டுகள் இல்லாமல், ரொக்க பணமும், காசோலைகளும் மட்டுமே உபயோகிப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். குறிப்பாக சிறு நகரங்களிலும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதியிலும் கடைகளில் பணப் பரிமாற்றம் அதிக அளவில் நடைபெறுகிறது.

இன்னொரு பக்கம், க்ரெடிட் கார்டு பழக்கத்தைத் தாண்டி, பேபால், கூகுள் பே என்று ஸ்மார்ட் போன் வழியாக வர்த்தக பணப் பரிமாற்றம் என்று எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது.

எந்த பிரச்சனையும் வராத வரையிலும் இந்த வகை பணப் பரிமாற்றம் அருமையாகத் தான் இருக்கிறது. இங்கே நண்பர் ஒருவருக்கு நேர்ந்துள்ள பிரச்சனையைப் பாருங்களேன்.

அமெரிக்காவில் உள்ளூர் பயணத்திற்காக டிக்கெட் புக் செய்திருக்கிறார். க்ரெடிட் கார்டு தகவல்களைக் கொடுத்து புக் செய்வது தான் இந்நாள் வரையிலும் அவருக்கு வழக்கமாம்.

டிக்கெட் புக் செய்து பணம் செலு பேபால் (Pay Pal) என்ற கூடுதல் வசதியும் அங்கே கொடுக்கப் பட்டிருந்ததைப் பார்த்திருக்கிறார். முழு க்ரெடிட் கார்டு தகவல்களையும் கொடுப்பதற்குப் பதில், பேபால் மூலம் பணம் செலுத்தி விடலாமே என்று நினைத்து விட்டார்.

அவருக்கு ஏற்கனவே பேபால் கணக்கு இருந்திருக்கிறது.அவருடைய க்ரெடிட் கார்டை பேபால் கணக்கில் பதிவு செய்து வைத்திருக்கிறார். வேறு சில பரிவர்த்தனைகளும் செய்திருக்கிறார்.

விமான டிக்கெட்டிற்கு முதல் முறையாக பேபால் பயனாளர் ஐடி, பாஸ்வேர்ட் கொடுத்து அடுத்த இரண்டு க்ளிக்குகளில் புக் செய்து முடித்து விட்டார்.

ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்ற தகவலையும் பார்த்திருக்கிறார். பேபால் இன்னும் எளிதாக இருக்கிறதே என்று மகிழ்ச்சியுடன் வேறு வேலை பக்கம் திரும்பி விட்டார்.

பயணத்திற்கு ஒரு வாரம் முன்னதாக, டிக்கெட் பற்றிய தகவல்களை சரிபார்க்கச் சென்றவருக்கு அதிர்ச்சி. அவருடைய விமான டிக்கெட் புக் செய்யப் படவில்லை.

விமான நிறுவனத்திற்கு போன் செய்து பார்த்தால், டிக்கெட் கேன்சல் ஆகிவிட்டது என்றார்களாம். பேபால் நிறுவனம் பணப் பட்டுவாடா செய்யவில்லை. அதனால் டிக்கெட்டை கேன்சல் செய்து விட்டோம்.

உங்களுக்கும் இமெயில் மூலம் தகவல் அனுப்பினோமே என்று விமான நிறுவன ஊழியர்கள் கை கழுவி விட்டார்கள்.

இமெயிலை கவனிக்க வில்லையா அல்லது அவரது இன்பாக்ஸ்க்கு செல்லாமல் இமெயில் Spam ஆகிவிட்டதா என்று நண்பர் கூறவில்லை.

பேபால் நிறுவனத்திற்கு அழைத்து கேட்டிருக்கிறார். அவர்கள் க்ரெடிடு கார்ட் நிறுவனம் இந்த பணப் பரிவர்த்தனையை அங்கீகரிக்க வில்லை. அதனால் நாங்கள் விமான நிறுவனத்திற்கு பணம் அனுப்பவில்லை என்று கூலாக பதிலளித்துள்ளார்கள்.

எனக்கு இது குறித்து நீங்கள் இமெயில் அனுப்பியிருக்கலாமே, க்ரெடிட் கார்டு நிறுவனம் ஏதாவது முறைகேடான பரிவர்த்தனை என்றால் என்னை அழைத்திருக்கும். அப்படி எந்த அழைப்பும் வரவில்லையே. உங்கள் பேபால் நிறுவனத்தில் தான் ஏதோ தவறு நடந்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

க்ரெடிட் கார்டு நிறுவனம் கேன்சல் செய்தால், வாடிக்கையாளர்களுக்கு தகவல் சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அப்படி இமெயில் அனுப்புவதும் வழக்கம் இல்லை என்று சொன்னார்களாம்.

புக் செய்த டிக்கெட்டும் இல்லை, பயணத் தேதிக்கு சில நாட்களே இருப்பதால், புதிய டிக்கெட்டிற்கு மும்மடங்கு விலையாம். பயணத்தை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்து விட்டாராம்.

முழு க்ரெடிட் கார்டு விவரங்களையும் பதிவு செய்து டிக்கெட் வாங்குவதற்குப் பதில், எளிதானது என்று பேபால் மூலம் புக் செய்தால் முதலுக்கே மோசம் போயிருக்கிறார்.

பேபால், கூகுள் பே , ஆப்பிள் பே போன்ற ஸ்மார்ட் போன் பணப் பரிமாற்றம் செய்யும் எல்லா நிறுவனங்களும் இடைத் தரகர்களே.

நேரடியாக க்ரெடிட் கார்டுகளை உபயோகிக்கும் போது பொருட்களை விற்கும்/ சேவை அளிக்கும் நிறுவனம் க்ரெடிட் கார்ட் நிறுவனத்திடம் பணம் பெற்றுக் கொள்வார்கள்.

வணிக மையங்களிலும், ஆன்லைன் வர்த்தகத்திலும் க்ரெடிட் கார்ட் தகவல்கள் ஹேக் செய்யப்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், பேபால் போன்ற நிறுவனங்கள் இடைத் தரகர்களாக வந்தனர்.

அதன் மூலம் க்ரெடிட் கார்ட் விவரங்கள் ஹேக் செய்யப்படுவது தவிர்க்கப் படுவதாக கூறுகிறார்கள்.

டெக்னாலஜி விவகாரத்தில் ஹேக் செய்யப்படும் வரை எல்லாம் பத்திரம் தான். ஹேக் செய்யப்பட்ட பிறகு ஏதாவது நொண்டிச் சாக்குகள் வருவது சாதாரணமான ஒன்றாகும்.

இந்த புதிய பணப் பரிவர்த்தனை நடைமுறையில் சற்று சுலமாகவும் இருக்கத் தான் செய்கிறது. ஆனால் நாம் கேட்காமலேயே அதிக பொறுப்புகள் நம் மீது திணிக்கப்படுகிறது என்பதுவும் உண்மை.

மேலே சொல்லப் பட்ட நண்பர் ,கூடுதல் கவனம் எடுத்து, பரிவர்த்தனை சரியாக நடந்ததா, விமான நிறுவனம் புக் செய்யப்பட்டதை உறுதி செய்ததா என்று பார்த்திருந்தால், உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பார்.

எந்த பணப் பரிவர்த்தனையாக இருந்தாலும், முழுமை அடைந்து விட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டியது பயனாளர்களின் கடமையாகும்.

புதிதாக வந்துள்ள பேபால், கூகுள் பே, ஆப்பிள் பே போன்ற இடைத்தரக பணப் பரிவர்த்தனையாளர்கள் உதவியாக இருந்தாலும், பயனாளர்களுக்கு மறைமுகமான கூடுதல் சுமை என்பதையும் மறுப்பதிற்கில்லை.

Are Pay Pal, Apple Pay , Google Pay kind of payment gateways really convenient to consumers. Here is an experience of a person using pay pal for online air ticket reservation.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!