அனிதாவுக்கு ஆதரவான அமெரிக்கப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அதிமுக! - VanakamIndia

அனிதாவுக்கு ஆதரவான அமெரிக்கப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் அதிமுக!


வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்கா உட்பட , அனிதாவின் மரணத்திற்காக போராடுபவர்களுக்குப் பின்னால் அரசியல்கட்சிகள் இருக்கின்றன என்று அதிமுகவின் ஆவடி குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், பங்கேற்ற அவர் போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் போலவும் சித்தரித்துள்ளார். அதே விவாதத்தில் பங்கேற்ற அமெரிக்கத் தமிழர் கவிதா பாண்டியன், போராட்டக்காரர்களை தீவிரவாதிகளாக குறிப்பிட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அமெரிக்காவில் அனிதா மறைவுக்காக போராடுபவர்கள் அனைவரும் சாமானியர்களே, எந்த அரசியல் கட்சியின் தூண்டுதலும் இல்லை, சமூக நீதிக்காக குரல் கொடுப்பவர்கள் மட்டுமே என்றும் தெளிவு படுத்தினார்.

ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் தமிழர்களின் போராட்டம் பெரிய அளவில் நடைபெற்றது. இந்திய தூதரகங்களில் ஆயிரக்கணக்கான கையெழுத்துகளுடன் மனுக்கள் குவிந்தது. வெளிநாட்டுப் பிரதமர் என்று குறிப்பிடப்படும் மோடிக்கு, அது பெரும் சங்கடத்தைக் கொடுத்தது. வெளிநாட்டுத் தமிழர்களின் அழுத்தமும், ஜல்லிக்கட்டு தீர்வுக்கு ஒரு காரணமாக இருந்தது.

அதைப் போலவே, தற்போது அனிதாவுக்கு அஞ்சலி என்று தன்னெழுச்சியாக எழுந்த தமிழர்கள், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், மனு தயார் செய்து கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளனர். 25க்கும் அதிகமான நகரங்களில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டங்களைத் தொடர்ந்து, பல நகரங்களில் இரண்டாவது வாரமாக நீடித்துள்ளது.

அடுத்த வாரம், இந்திய தூதரங்களுக்கு முன்னால் அமைதி வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தயாராகி வருகிறார்கள். இந்நிலையில், அரசியல் கட்சிகளின் தூண்டுதல்களில் தான் இந்த போராட்டங்கள் நடைபெறுவதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டம், பீட்டா என்ற அமெரிக்க நிறுவனத்திற்கு எதிரானது. எல்லோருக்கும் பொதுவான வெளிநாட்டு எதிரி. தற்போது ஆளும் மத்திய, மாநில அரசுக்கு எதிரான போராட்டமாக நீட் உருவெடுத்துள்ளது. அமெரிக்காவிலும் ஆளுங்கட்சி அபிமானிகள் இருப்பது நிதர்சனமான உண்மையாகும். ஆனாலும் நீட் -க்கு ஆதரவு என்று யாரும் கிளம்பவில்லை.

போராட்டக் குழுக்களுக்குள்ளேயே சிலர் நீட் திமுகவும், காங்கிரசும் கொண்டுவந்த திட்டம் தானே என்ற குரல்களை எழுப்புகிறார்கள். முன்னெடுத்துச் செல்லும் செயற்பாட்டாளர்கள், அவற்றை சுலபமாக கடந்து, செய்ய வேண்டியதை நோக்கி நகர்கிறார்கள்.

கல்வி உரிமையை மாநிலத்திற்கு திரும்பப் பெறுவது, நீட்-க்கு தடை கோரும் தமிழக மசோதாக்களுக்கு மத்திய அரசு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் என்ற கோரிக்கைகளுடன் இந்திய தூதரகம் நோக்கிச் செல்லும் திட்டத்தில் செயல்படுகிறார்கள்.

அமெரிக்காவில் போராட்டம் வலுவடைந்து வருவதைப் பார்த்தோ என்னவோ, சமூத்தளங்களிலும் அமெரிக்கத் தமிழர்களை குறிவைத்து அவதூறு பரப்பப் படுகிறது. சிங்கப்பூரில் கணிணித் துறையில் வேலைபார்க்கும் பிரபல பதிவர், தமிழகத்தில் சேவை செய்ய மறுத்து, அமெரிக்காவில் வேலை பார்க்கும் மருத்துவர்கள்தான் இந்த போராட்டத்தை நடத்துகிறார்கள் என்று அவதூறு பரப்பியுள்ளார்.

உண்மை என்னவென்றால், அமெரிக்க களத்தில் உள்ளவர்கள் அனைவருமே கணிணித்துறையில் வல்லுநர்கள். பெரும்பாலோனோர் முதல் அல்லது இரண்டாம் தலைமுறை பட்டதாரிகள். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வந்தவர்கள். நாம் தொடர்பு கொண்ட பலரும், தாங்கள் படித்து வந்த கல்லூரி, ஊர்களை பகிர்ந்து கொண்டார்கள்.

கல்வி வாய்ப்பு கிடைத்ததால் மட்டுமே, அமெரிக்கா வரை தங்களால் வர முடிந்தது, வாழ்க்கைத் தரம் உயர்ந்தது என்று தெரிவிக்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த கல்வி வசதி, தங்கள் பகுதியைச் சார்ந்த அடுத்த தலைமுறையினருக்கு மறுக்கப்படுவதைப் பார்த்து கோபப்படுகிறார்கள். ஏழை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை களையவேண்டும் என்கிறார்கள்.

இவர்கள் பின்னால் எந்த அரசியல் கட்சியோ அல்லது அமைப்புகளோ கிடையாது. அதிமுகவைச் சார்ந்தவர்களே, அனிதா நினைவேந்தலில் பங்கேற்று, தமிழகத்தில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்று இங்கே குரல் கொடுத்துள்ளனர்.

போராட்டங்களை முன்னெடுத்துச் செல்பவர்கள் யாரும் எந்த தமிழ் அமைப்புகளிலும் பொறுப்புகளில் இல்லை. பங்கேற்கும் குடும்பங்களுக்கும் அரசியல் கட்சிகளின் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. தமிழக நலனுக்காக தன்னெழுச்சியாக உருவாகியுள்ள போராளிகளாகத் தான் தெரிகிறார்கள். ஜல்லிக்கட்டைத் தொடர்ந்து, நீட் தவிர, அடுத்தடுத்த தமிழக பிரச்சனைகளுக்கும் இவர்கள் கட்டாயம் களம் இறங்குவார்கள் என நம்பலாம்.

ஆவடி குமார் சொல்வது போல் அரசியல்கட்சிகளின் ஆதரவு இருக்கும் என்றால், அது ஆளுங்கட்சிக்கு ஆதரவாக போராட்டத்தின் வீரியத்தை குறைக்க செய்யும் முயற்சியாக இருக்க வேண்டுமே, எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.

தன்னெழுச்சியாக தமிழக நலுனுக்காக போராடும் அமெரிக்கத் தமிழர்கள் மீது அவதூறு சுமத்தும் வகையிலும், போராட்டத்தின் வீரியத்தை குறைப்பதற்க்காகத் தான் இத்தகைய குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

– இர தினகர்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!