விஷாலின் ஆர்கே நகர் வேட்பு மனு விவகாரம்.. ரஜினி கமலுக்கு விடப்பட்டுள்ள மிரட்டலா? - VanakamIndia

விஷாலின் ஆர்கே நகர் வேட்பு மனு விவகாரம்.. ரஜினி கமலுக்கு விடப்பட்டுள்ள மிரட்டலா?

சென்னை : தேர்தல் மனு நிராகரிக்கப்பட்டது தமிழகத்தில் புதிதானது இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்கு தேர்தல் மனுக்கள் நிராகரிக்கப் பட்டதும், அதை திமுகவின் சதி என்று அரசியல் ஆதாயம் தேடி வெற்றி பெற்றதும் தமிழகத்தில் நடந்தது தான்.

ஒருவர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் மனு அளித்தால் , நிராகரிக்கப்படும் என்ற விதி இருப்பது தெரிந்தும், நிராகரிக்கப் படவேண்டும், அதைக் காட்டி அனுதாபம் பெற வேண்டும் என்றே ஜெயலலிதா அவ்வாறு செய்தார். அவர் நினைத்ததை நடத்தியும் காட்டினார்.

அவருடைய வழியில், தேர்தலில் போட்டியிட அறிவித்து, ஆனால் மனுவை அதிகாரி தள்ளுபடி செய்வதற்கு வசதியாக படிவங்களை இணைக்காமல், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆர்கே நகரில் நாடகம் ஆடியுள்ளார்.

விஷால் விவகாரம் வித்தியாசமானது. விடலைப் பையன் என்று எல்லோரும் லேசாக நினைத்திருந்தவர், சரத்குமார் அணியை வென்று நடிகர் சங்கத்திற்குள் நுழைந்தது ஆச்சரியமாகத் தான் இருந்தது. குறைந்தப் பட்சம் சரத்குமார் தலைவராக வெற்றி பெறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது.

அடுத்து, தடாலடியாக தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் ஆகிவிட்டார். எதிர்தரப்பில் கலைப்புலி தாணு, சேகரன், டி,சிவா என முக்கிய புள்ளிகள் ஒன்று திரண்டு போட்டியிட்டும் விஷால் அணியிடம் தோற்று விட்டனர்.

ஆர்.கே நகரிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடித்து விடலாம் என்ற நப்பாசையில் தான் களத்தில் குதித்துள்ளார் விஷால். திமுக வாக்கு தனக்கு கிடைக்காது என்று தெரிந்ததும், ஏதோ பரம்பரை அதிமுக காரர் என்ற நினைப்புடனே,அண்ணா சிலை, எம்ஜிஆர் தோட்டம், ஜெயலலிதா சமாதி போனவர், காமராஜருக்கும் வணக்கம் வைத்தார். ஆர்கே நகரில் நாடார்கள் வாக்குகள் இருக்கிறதே..

அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன் சம்மந்தப்பட்ட சந்திரலேகா ஆசிட் வழக்கு பற்றி மீண்டும் தகவல்கள் பரப்பப் பட்டன. அது விஷால் வேலையா என்று தெரியவில்லை. ஆனாலும விஷாலுக்கு சாதகமான செயல் தான். மதுசூதனன் தெலுங்கு மொழியைச் சார்ந்தவர். அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தெலுங்கு மக்களில் வாக்குகளை பிரித்து விடலாம். சினிமா பாப்புலாரிட்டி மூலம் எளிய மக்களை கவர்ந்து விடலாம் என்று திட்டம் தீட்டித்தான் இறங்கியுள்ளார் விஷால். இரண்டாவது இடம் கிடைத்தால் கூட விஷாலுக்கு நல்ல அடித்தளமாக அமைந்திருக்கும்.

எதிரணியினர் அவ்வளவு சுலபமாக விட்டுவிடக்கூடியவர்களா? இன்று பக்திப்பழமாக காட்சி அளிக்கும் மதுசூதனனின் பின்னணி ஒன்றும் சாதாரணமானது அல்லவே!

வேட்பு மனுவையே நிராகரிக்கச் செய்வது தமிழக அரசியலுக்கு புதிதாக இருக்கிறது. டெக்னிகல் காரணங்களுக்காக நிராகரிக்கப் பட்டிருந்தால் மனுதாரரின் கவனமின்மை என்று எடுத்துக் கொள்ளலாம். வேட்பு மனுவில் கையெழுத்துப் போட்டவர்கள், நேரில் சென்று அது தங்கள் கையெழுத்து இல்லை என்று சொன்னால், அது அரசியல் ரீதியான அழுத்தமாகத் தான் இருக்க வேண்டும்.

மதுசூதனனுக்கு அரசியல் மறுவாழ்வு கொடுக்கப் போகும் தேர்தலை அவ்வளவு சுலபமாக விட்டு விடுவாரா என்ன? ஆனால் இது அவருடைய தனிப்பட்ட முடிவாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. ஆளும் தரப்பில் விடப்பட்டுள்ள சவாலாகத் தான் கருத வேண்டியுள்ளது. அதுவும் மத்திய அரசின் மறைமுகக் கட்டுப்பாட்டிற்குள் உள்ள தேர்தல் ஆணைய முடிவு என்பதால், இதில் பாஜகவின் தலையீடு இருக்கும் என்பதையும் நம்ப வேண்டியுள்ளது.

விஷால் தோற்கடிக்க முடியாதவரா? அவருக்காக இவ்வளவு மெனக்கெடனுமா என்றெல்லாம் கேள்விகள் எழுவது இயற்கையே? விஷால் போன்ற பிரபலங்களுக்கே இந்த நிலை என்றால், நாளை ரஜினி சார்பிலும், கமல் சார்பிலும் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள்!

ரசிகர்களாக இருந்து நேரடியாக அரசியலுக்கு வருபர்களுக்கு நெளிவு சுளிவு தெரியுமா? தேர்தல் விவகாரங்கள் அத்துப்படியாக இருக்குமா?

அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் நாங்கள் என்று ரஜினிக்கும் கமலுக்கும் விடப்பட்டுள்ள மறைமுக எச்சரிக்கையாகவும் இந்த வேட்புமனு நிராகரிப்பை கவனிக்க வேண்டியுள்ளது.

எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்கும் கமல் ஹாசன் தேர்தலை எப்படி அணுகுவார் என்று தெரியவில்லை. ஆனால், ரஜினி இதையெல்லாம் எதிர்ப்பார்த்து இருப்பார். தக்க முன் ஆலோசனை செய்து கொண்டிருப்பார், சரியான திட்டமிட்டு வியூகம் அமைப்பார் என்றே தெரிகிறது.

– ஸ்கார்ப்பியன்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!