அன்பும் ப்ரியமும் கொண்ட எங்கள் தல அஜித்துக்கு... - ஒரு ரசிகனின் திறந்த மடல் - VanakamIndia

அன்பும் ப்ரியமும் கொண்ட எங்கள் தல அஜித்துக்கு… – ஒரு ரசிகனின் திறந்த மடல்

விவேகம் பட தோல்வியால இதை நான் எழுதலை. ரொம்ப நாளா மனசுக்குள்ள போட்டு வெச்சுருந்த சில விஷயங்களை கொட்டுறேன். விவேகம் பட தோல்வி, விமர்சன சர்ச்சை அது இதுன்னு எல்லாத்தையும் விட்டு வந்து ஆசுவாசமாகிருப்பீங்கன்னு நம்புறேன். ரிலாக்ஸ் ஆன சமயத்துல இதை படிங்க.

உங்களைச் சுற்றி ஒரு வட்டம் போட்டுக்கிட்டு அதுக்குள்ளேயே நின்னுட்டுருக்கீங்க… அந்த வட்டத்தை நீங்களா போட்டுக்கிட்டீங்களோ இல்லை நீங்க ரொம்ப நம்புற ஆட்கள் போட்டாங்களோ… ஆனா வட்டம் உங்களை சுத்திதான் இருக்கு. அந்த வட்டம்தான் உங்களை மக்கள்கிட்டருந்து ரொம்ப்ப்ப்ப்ப தள்ளிப்போக வெச்சுடுச்சு. இதுதான் விவேகம் மாதிரியான ஒரு கதையை நீங்க ஓகே பண்ண காரணமா இருந்துருக்கணும்.

மக்கள்கிட்டருந்து விலகி இருந்தாதான், அவங்க கண்ணுல கூட படாம இருந்தா தான் அஜித்தை திரையில பார்க்கிறதுக்கு ரசிகர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும். அதனால அஜித்தை காமிச்சே சம்பாதிக்கலாம்னு சைக்காலஜிக்கலா நினைக்கிற ஆட்களோட சதிவலையில விழுந்துட்டீங்களோன்னு சந்தேகமா இருக்கு. இல்லை இது நீங்களா ஏற்படுத்திகிட்டதுன்னா உங்க மனசுல ‘நான் ஒரு கடவுள்’ அப்படிகற எண்ணம் இருக்கணும். எங்களுக்கு தெரிஞ்சு உங்ககிட்ட அப்படி ஒரு எண்ணத்தை பார்த்ததில்லை. அப்ப இது உங்களை சுத்தி உள்ளவங்க பண்ற வேலையாத்தான் இருக்கணும்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஸ்டண்ட் யூனியன் நிகழ்ச்சி நடந்துச்சு. நீங்க வரலை. ஆனா அந்த நிகழ்ச்சில எந்த ஹீரோவுக்கு ரசிகர்கள்கிட்டருந்து அதிக வரவேற்பு கிடைச்சதுன்னு வீடியோ வாங்கிப் பாருங்க… சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நிகரா விஜய் சேதுபதிக்குக் கிடைச்சிச்சு. விஜய்சேதுபதி மகத்தான கலைஞன் மட்டும் இல்லை. தன்னோட ரசிகனை, தனக்காக காசு கொடுத்து படம் பார்க்கிற பொது மக்களை மதிக்கத் தெரிஞ்ச ஒருத்தர். எந்த ரசிகரா இருந்தாலும் அவரை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து படம் எடுத்துகிட்டு அந்த ரசிகனை திருப்திப்படுத்துறாரு.

அதுனால விஜய் சேதுபதி மாதிரி இருங்கன்னு சொல்லலை. ஏன் உங்க லெவல் வேற… ஆனா ரசிகனை திருப்திப்படுத்துங்க. நேர்ல இல்லன்னாலும் நடிக்கிற படங்கள்லயாவது. இன்னிக்கு தென்னிந்தியாவுல ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் அதிகமா இருக்கற ஆள் நீங்க ன். உங்களை திரையில பார்க்கும்போது அவ்வளவு உற்சாகமா இருக்கும். ஆனா இரண்டரை மணி நேரம் உங்களை மட்டுமே பார்த்துட்டு இருந்தா ரசிகனுக்கு போரடிக்காதா?

கதை கேட்கும்போது கவனமா கேட்கிறீங்களா இல்லையான்னே தெரியலை… உங்க ரசிகர்கள்கிட்டயே கேட்டுப் பாருங்க… வீரம், வேதாளம் படத்துக்குலாம் நாங்க படாதபாடு பட்டோம். ஏன் பிடிச்சுருக்கு? படத்துல எது உருப்படியா இருந்துச்சு? இப்படி எது கேட்டாலும் ’தல நல்லவர்’ அப்படின்னு சொல்லியே எத்தனைப் படங்களுக்குச் சமாளிக்கிறது?

உங்களுக்கே நல்லாத் தெரியும் உங்களை விட ரஜினி எவ்வளவு மேல இருக்கார்ன்னு. ஆனா அவரே டவுன் டூ எர்த்தா, ஒரு நல்ல படம் வந்தா அந்த பட சம்பந்தப்பட்ட ஆட்களுக்கு போன் போட்டு பேசி மனசார பாராட்டுறாரு. ஆனா தமிழ் சினிமாவுல இருக்கற ஹீரோக்கள்லேயே என்னமோ ஏலியன் ரேஞ்சுக்கு பிடிக்கவே முடியாத ஆள்னா அது நீங்க தான் தல!

’நான் இறங்கிப்போறவன் இல்ல… ஏறிப்போறவன்’ இது நீங்க பேசுன டயலாக். ஆனா பொதுவாழ்க்கையை பொறுத்தவரைக்கும் இறங்கிப்போனாத்தான் ஏறவே முடியும்.

இன்னும் நிறைய பேசலாம். ஆனா இந்த சூழல்ல உங்களை காயப்படுத்த விரும்பலை. பேசிக்கான விஷயத்தை மட்டும்தான் சொல்லியிருக்கேன். நன்றி வணக்கம்

இப்படிக்கு

உங்கள் ரசிகன்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!