அமெரிக்கத் தமிழ்பள்ளி குழந்தைகளுக்காக 'வணக்கம் இந்தியா' இணையத்தளத்தில் சிறப்புப் பகுதி! - VanakamIndia

அமெரிக்கத் தமிழ்பள்ளி குழந்தைகளுக்காக ‘வணக்கம் இந்தியா’ இணையத்தளத்தில் சிறப்புப் பகுதி!

அமெரிக்கத் தமிழ்ச் சொந்தங்களுக்கு வணக்கம்,

பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால், தமிழ் மொழியை அரும் பாடுபட்டு வளர்த்து வரும் உங்கள் முயற்சிகளை நன்றாக அறிவோம்.

எனது சமீபத்திய இரண்டு அமெரிக்கப் பயணங்களின் போதும், அங்குள்ள தமிழ்ப் பள்ளிகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்க் குழந்தைகளுடனும் ஆசிரியர்களுடனும் கலந்துரையாடி மகிழ்ந்தேன்.

உள்ளூர் அமெரிக்கர்களுக்கு இணையாக, ஏன் அவர்களை விடவும் மேலாக, கல்வியில் நம் குழந்தைகள் சிறந்து விளக்குங்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்.

அமெரிக்காவிலேயே பிறந்து வளரும் குழந்தைகள், தமிழ் கற்றுக் கொள்வதற்கு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் எடுத்து வரும் கடும் முயற்சிகளைக் கண்டு பேருவுகை பெற்றேன்.

குழந்தைகளின் மழலை மொழியில், கணீரென்ற தமிழ்ப் பேச்சைக் கேட்டு மயங்கிப் போனேன். எழுதவும், படிக்கவும், பாடுவதற்கும் மற்றும் தமிழ்ப் பேசி நாடகங்களில் நடிப்பதற்கும் பயிற்சி அளிக்கப்படுவதை அறிந்து கொண்டேன்.

எதிர்காலத்தில் இந்த குழந்தைகள் தமிழுக்கும், உலகத் தமிழர்களுக்கும் உறுதுணையாக திகழ்வார்கள் என்ற நம்பிக்கையும் பிறந்தது.

டல்லாஸில் உள்ள ப்ளேனோ தமிழ்ப் பள்ளிக்குச் சென்ற போது, அமெரிக்கத் தமிழர்களின் இத்தகைய அரும்பெரும் பணிக்கு, பத்திரிக்கையாளனாக என்ன செய்யலாம் என்ற கேள்வி என்னுள் எழுந்தது.

சற்றும் தாமதிக்காமல் இந்த குழந்தைகளுக்காக ஒரு தனிப்பகுதியே உருவாக்குகிறேன். உங்கள் படைப்புகளை அனுப்பி வையுங்கள் என்று குழந்தைகளிடம் வாக்குறுதி கொடுத்தேன்.

அதை நிறைவேற்றும் வேளை வந்து விட்டது. உங்கள் ‘வணக்கம் இந்தியா’ இணையத் தளத்தில் தமிழ்க் குழந்தைகளின் படைப்புகளுக்கென தனிப் பகுதி ஒன்றை தொடங்கியுள்ளோம்.

அமெரிக்க வெளியீட்டுப் பக்கத்தில் இடம் பெறும் இப்பகுதியில், அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகளில் பயின்று வரும் தமிழ் மாணவர்களின் படைப்புகளை வெளியிட உள்ளோம்.

கதை, கட்டுரை, வீடியோவில் பேச்சு, வீடியோவில் கதை சொல்லுதல், மீம்ஸ், டப் மாஷ், வீடியோவில் பாட்டு உள்ளிட்ட படைப்புகளை அனுப்பலாம். அவை நல்ல கருத்துக்களுடன், தமிழில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனையாகும்.

மாணவர் பெயர் , வகுப்பு(நிலை), தாய் – தந்தை பெயர், ஆசிரியர் பெயர், பள்ளியின் பெயர் ஆகிய விவரங்களுடன் VanakamIndiaUS@gmail.comஎன்ற இமெயில் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். தமிழ்ப் பள்ளிகள் மூலம் படைப்புகள் வரவேற்கப் படுகின்றன.

2017- 18 புதிய கல்வி ஆண்டு தொடங்கி விட்டது. வழக்கமான பள்ளிக்கும், வார இறுதியில் தமிழ்ப் பள்ளிக்கும் குழந்தைகள் சென்று வரத் தொடங்கியுள்ளார்கள்.

குழந்தைகளின் தமிழ்ப் படைப்புகளை ஊக்குவித்து அனுப்பி வைக்குமாறு அமெரிக்காவில் இயங்கும் அனைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் கோரிக்கை விடுக்கிறோம்.

வாழ்க தமிழ் ..வெல்க தமிழர்கள்.

நன்றி
முதன்மை ஆசிரியர்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!