பள்ளிக்கு வாங்க.. பாடலுடன் அழைக்கும் ப்ளூமிங்டன் அப்துல் கலாம் தமிழ்ப் பள்ளி! - VanakamIndia

பள்ளிக்கு வாங்க.. பாடலுடன் அழைக்கும் ப்ளூமிங்டன் அப்துல் கலாம் தமிழ்ப் பள்ளி!

ப்ளூமிங்டன்(யு,எஸ்): அமெரிக்காவில் இயங்கும் டாக்டர் அப்துல் கலாம் தமிழ்ப் பள்ளியில் மாணவர்களை பள்ளிக்கு அழைக்கும் விதமாக வீடியோ வடிவில் பாடல் வெளியிட்டுள்ளார்கள்.

இலனாய் மாநிலத்தில் உள்ள ப்ளூமிங்டன் நகரில் சுமார் 2 ஆயிரம் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். ப்ளூமிங்டன் மற்றும் மெக்லின் கவுண்டியில் வசிக்கும் தமிழர்களுக்காக மெக்லின் தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்கத்தின் சார்பில் டாக்டர். அப்துல் கலாம் தமிழ்ப் பள்ளியும் நடத்தப்படுகிறது.

2015ம் ஆண்டு தொடங்கப்பட்டதாலும், அந்த ஆண்டு மறைந்த மறைந்த டாக்டர் கலாமுக்கு மரியாதை செய்யும் விதமாகவும், அவர் பெயரிலேயே இந்த பள்ளி இயங்குகிறது.35 குழந்தைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளியில் தற்போது 70 மாணவர்கள் தற்போது தமிழ் பயின்று வருகிறார்கள். இருபதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் / தன்னார்வலர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளியின் முதல்வராக உமா கைலாசம் துணை முதல்வராக ரத்னகுமார் வழி நடத்துகிறார்கள். மெக்லின் கவுண்டி தமிழ்ச்சங்கத் தலைவர் கிருஷ்ணா பள்ளி செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருக்கிறார். உலக கல்விக் கழகத்தின் (கலிஃபோர்னியா தமிழ் அகடமி) உதவியுடன் டாக்டர் அப்துல் கலாம் தமிழ்ப் பள்ளி செயல்படுகிறது.

அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் உள்ள ப்ளூமிங்டன் நகரத்தில், அங்கேயே பிறந்து வளரும் குழந்தைகள், இரண்டு ஆண்டுகளில் சரளமாக தமிழில் பேசும் அளவுக்கு பயிற்சி பெற்றுள்ளார்கள். ஆண்டு விழாவிலும் மாணவர்கள் தங்கள் திறமைகளை தமிழில் பேசி, நடித்து வெளிப்படுத்தினர்.

மாணவர்களின் தமிழ் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் வகையில், புதிதாக ஒரு பாடலை இயற்றி, இசையமைக்கச்செய்து, வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்கள். அன்புள்ள குழந்தைகளே அப்துல்கலாம் பள்ளிக்கு வாங்க என்று தொடங்கும் இந்தப் பாடல் யூடியூபிலும் வெளியிடப்பட்டுள்ளது

அமெரிக்காவின் பெரிய நகரங்களான, நியூயார்க் , நியூஜெர்ஸி, வாஷிங்டன் டிசி, அட்லாண்டா, டல்லாஸ், ஹூஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சியாட்டல், சிகாகோ, சான் ஃப்ரான்சிஸ்கோ போன்ற பெரு நகரங்கள் மட்டுமல்லாமல், அடுத்த கட்ட நகரங்களான ப்ளூமிங்டன் உள்ளிட்ட நகரங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் இயங்கிவருவது குறிப்பிடத் தக்கதாகும்.

அடுத்த தலைமுறைத் தமிழர்களான குழந்தைகளுக்குஅமெரிக்கா முழுவதும், தமிழ் மொழி கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் பெருகி வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும்.

– இர தினகர்

Video link :

AKTP SONG

Uploaded by VinothKumar TR on 2017-05-06.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!