வாழ்க்கையில் வெற்றி பெற பெண்களை வணங்குங்கள்... - அமெரிக்கக் கல்வியாளர் அறிவுறுத்தல்! - VanakamIndia

வாழ்க்கையில் வெற்றி பெற பெண்களை வணங்குங்கள்… – அமெரிக்கக் கல்வியாளர் அறிவுறுத்தல்!

டல்லாஸ்(யு.எஸ்). அமெரிக்காவின் பிரபல மாணவர் பயிற்சி மையமான ‘அட்வான்டேஜ் டெஸ்டிங்’ நிறுவனர் டாக்டர் அருண் அழகப்பன், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பெண்களை மதித்து வணங்குவது முக்கியமானதாகும் என்று கூறியுள்ளார்.

சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் ‘ வளமான எதிர்காலம்’ என்ற ஏழாவது ஆண்டு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் அருண் அழகப்பன் கலந்து கொண்டார். இளவயதிலேயே, பெற்றோருடன் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்துவிட்ட அருண், கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு, SAT, ACT தேர்வுகளில் பயிற்சி அளிக்கும் ‘அட்வான்டேஜ் டெஸ்டிங்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.

டல்லாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கல்லூரியில் சேர்வதற்கு தேவையான ஆயத்த பணிகள் பற்றி, மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எடுத்துரைத்தார்.

“பெற்றோர்கள் தான் நமக்கு முதல் உலகம். அவர்களின் வழிகாட்டுதலில் தான் நம்முடைய வெற்றி தொடங்குகிறது. பெற்றோர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். என் தந்தை தாய் கற்றுக் கொடுத்தவைகளைத் தான் நான் பின்பற்றி வருகிறேன். எனது நிறுவன வெற்றிக்கு அவை மூல காரணங்கள்.

என் தந்தை மூன்று கட்டளைகளை எங்களுக்குக் கற்றுத் தந்தார். அறப்பணிகளை வாழ்வின் ஒரு அங்கமாக வைத்துக் கொள்ளவேண்டும். சிந்தனைகள் எதிர்காலத்தை நோக்கி இருக்க வேண்டும். எந்த முயற்சிகளையும் முழுமையாக உறுதியாக எடுக்க வேண்டும் என்று அவர் சொன்னார். அதை இன்றளவும் கடைப்பிடித்து வருகிறேன்.

அமெரிக்காவில் ஏனைய அமெரிக்கர்களை விட இந்திய வம்சாவளியினருக்கு நல்ல கல்வி கிடைக்கிறது. சிறந்த வேலைகள், தொழில் நிறுவனர்கள் என பொருளாதார நிலையில் நல்ல நிலையில் இருக்கிறோம். நாம் கடினமாக உழைக்கிறோம். நம்மை விட கீழே பொருளாதார நிலையில் உள்ளவர்களுக்கு நாம் உதவி செய்து, அவர்கள் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்கும் செயல்பட வேண்டும்.

என்னுடைய வெற்றிக்குக் காரணங்களாக ஒன்பது கொள்கைகளை காரணமாக கருதுகிறேன். முதலாவதாக, புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம். ஏராளமான புத்தகங்களை, புதுத்புது தகவல்களை வாசிக்க வேண்டும். இன்றளவும் எனக்கு வாசிக்கும் பழக்கம் தொடர்கிறது.

இரண்டாவதாக, கணக்குப் பாடத்தை முழுமையாக கற்றுக் கொள்வது. தமிழரான ராமானுஜம் உலக கணக்கு மேதை என்பது நாம் அறிந்தது. கணிதத்தை நாம் கண்டிப்பாக கற்றறிந்து கொள்ள வேண்டும். உடன் அறிவியல் பாடமும் அவசியம்.

மூன்றாவதாக, பெற்றோர்கள் குழந்தைகளை கேள்வி கேட்க ஊக்கப் படுத்த வேண்டும். கேள்வி கேட்கும் திறன், ஒருவருக்கு கற்கும் திறனையும் அதிகரிக்கும்.

கடின உழைப்பு. தாமஸ் எடிசன் ஒருவருடைய வெற்றிக்கு காரணம் ஒரு சதவீதம் சிந்திக்கும் திறன் என்றால் 99 சதவீதம் அதை செயலாற்ற தேவையான உழைப்பு என்றார். வேலைக்கு சில நிமிடங்கள் முன்னதாகச் செல்லுங்கள். சில நிமிடம் தாமதமாக வெளியே வாருங்கள். அந்த கூடுதல் நிமிடங்கள் உங்களின் வெற்றியை உறுதி செய்யும்.

ஐந்தாவதாக 3 – 33 ரூல் . நல்ல செய்தி மூன்று பேருக்குத் தான் போய் சேரும். கெட்ட சேதி 33 பேருக்குப் போய்ச் சேரும். உங்களைச் சுற்றி நல்ல செய்தி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல சிந்தனையாளர்களுடன், நல்லவற்றையே செய்யுங்கள்.

பெற்றோர்களை மதிப்பது வாழ்க்கையின் வெற்றிக்கும் மிகவும் முக்கியமானது. எனது பெற்றோர் எப்படி எங்களுக்கு நல்லதைச் சொல்லித் தந்தார்களோ, அப்படியே அனைத்துப் பெற்றோர்களும், அவர்கள் குழந்தைகளுக்கு நல்லதையே சொல்லித் தருவார்கள். பெற்றோர்களை மதித்து அவர்களுடைய கருத்தை உள்வாங்கி செயல்படுவது நிச்சயம் வெற்றியைத் தரும்

ஏழாவதாக, ஒரு போது கவலையில் மூழ்கிக் கிடக்காதீர்கள். வாழ்க்கை என்பது இருபக்க நாணயம் என்றால், ஒரு பக்கம் WORK இன்னொரு பக்கம் WORRY. இரண்டில் ஒரு பக்கம் தான் நான் பார்க்க முடியும். கவலைப் பட்டுக் கொண்டே இருந்தால் வேலை நடக்காது. வேலையை ஒழுங்காகப் பார்த்தால், கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.

அடுத்து மிக முக்கியமானது, பெண்களை மதிப்பது. பெண்கள் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவர்கள்.அம்மாவும், மனைவியும், மகளும் நம்முடைய ஆக்க சக்திகள். அவர்கள் நம்மை ஆளாக்குகிறார்கள். நம் குடும்பத்தின் முதுகெலும்பாக இருக்கிறார்கள். நம்முடைய ஒவ்வொரு செயலிலும் அவர்களுடைய பங்கு இருக்கிறது. சக்தி, செல்வம், கல்வி என கடவுள்களையும் நாம் பார்வதி, லஷ்மி, சரஸ்வதி என்று பெண்கள் வடிவில் வணங்குகிறோம். பெண்களை மதிக்காமல் வாழ்வில் முன்னேற்றம் இல்லை.

ஒன்பதாவதாக, அடுத்தவர்களுக்கு தாராளமான உதவிகள் செய்யுங்கள். நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு நாம் கடமைப் பட்டுள்ளோம். அவர்கள் முன்னேற்றத்திற்கும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். நம்மை மட்டுமே நினைத்தோம் என்றால் இருட்டில் இருப்பதற்குச் சமம். இருட்டில் புலம்புவதை விட வெளிச்சத்திற்காக ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றுவது சிறந்தது என்ற பழமொழியை நினைவு கொள்வோம். நம்மைச் சுற்றி இருக்கும் சமூகத்திற்கு உதவியாக இருப்போம்.

என்னுடைய வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் இந்த கொள்கைகள் உங்களுடைய வெற்றிக்கும் உடன் இருக்கும் என்று நம்புகிறேன்’ என்றார். தொடர்ந்து மாணவர்கள், ACT, SAT தேர்வுக்கு தயாராவதற்கு உரிய பயிற்சி முறைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

மிகவும் இளவயதிலேயே, அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து முற்றிலும் அமெரிக்கச் சூழலில் வளர்ந்து, அமெரிக்காவின் முன்னணி பயிற்சி நிறுவனத்தை நிறுவி வெற்றிகரமாக செயல்படுத்திகிறார் டாக்டர். அருண் அழகப்பன். பிரசித்துப் பெற்ற பிரின்ஸ்டன் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்.

அவருடைய அறக்கட்டளை மூலம், அமெரிக்காவில் உள்ள ஏழை மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து, பிரின்ஸ்டன், ஹார்வர்ட், ஏல் உள்ளிட்ட பிரசித்துப் பெற்ற பல்கலைக்கழகங்களில் சேர உதவி செய்கிறார். அறக்கட்டளை பணிகளுக்காக தன்னுடைய நேரத்தில் பாதிக்கும் மேலாக செலவிடுகிறார். பல்வேறு ஸ்காலர்ஷிப்களும் ஏழை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்.

இத்தனை பெருமைக்கும் உரியவர், தனது வெற்றிக்கு தன்னுடைய குடும்ப பெண்கள் முக்கிய காரணம் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களும் அதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது நெகிழ்ச்சியாக இருந்தது.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *