அமெரிக்காவுக்கு வட கொரியா ஒரு பொருட்டே இல்லே... முன்னாள் ராணுவ அதிகாரி உறுதி..! - VanakamIndia

அமெரிக்காவுக்கு வட கொரியா ஒரு பொருட்டே இல்லே… முன்னாள் ராணுவ அதிகாரி உறுதி..!

டல்லாஸ்(யு.எஸ்): அமெரிக்க ராணுவத்தில் கட்டுப்பாட்டு அறை அதிகாரியாக பணியாற்றிய முன்னாள் அதிகாரி, வட கொரியாவால் அமெரிக்காவுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.

வேறு அலுவல் காரணமாக முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரி ஒருவரை சந்திக்க நேர்ந்தது. மதிய உணவுக்குப் பிறகு பொதுவான உரையாடலாக தொடர்ந்தது.

கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டு களத்தில் இருக்கும் வீரர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரியாக பணியாற்றியவர். குவைத், ஈராக் போர் காலங்களில் களத்தில் இருந்துள்ளார்.

ராணுவ முகாமுக்கு பயணப்படும் போது 6 – முதல் 8 பெட்டிகள் வரை, விமானத்தில் அனுமதிக்கப் படுமாம். ராணுவ உடையில் இருந்தால் கூட, டூட்டியில் சேர்வதற்கான உத்தரவை காட்டினால் தான் பெட்டிகளை அனுமதிப்பார்களாம்.

போர்க்களத்திற்கு போகிறோம். திரும்பி வருவோமா என்ற உத்தரவாதம் இல்லாமல் செல்லும் நேரத்தில், உத்தரவைக் காட்டு என்று சொல்லும் போது இருக்கும் மன நிலையை யோசித்துப் பாருங்கள் என்றார்.

இத்தனை பெட்டிகளையும் ராணுவ உடைகளையும் எடுத்துக் கொண்டு, உல்லாசப் பயணமா போக முடியும். சில நேரங்களில், விதிமுறைகள் நடைமுறைக்கு எதிராக இருக்கிறது. அமெரிக்காவும் விலக்கல்ல என்றார்.

கட்டுப்பாட்டு அறையில் இருந்து கொண்டு,உடனுக்குடன் வரும் தகவல்கள் அடிப்படையில், வீரர்களுக்கு உத்தரவு பிறப்பித்து, அவர்களை பாதுகாப்பாக முன்னேறச் செய்வது மிகவும் சவாலான ஒன்று. சில நேரங்களில் கண் எதிரே மானிட்டரில், வீரர்கள் மடிவதைப் பார்க்கவேண்டிய சூழல். எல்லாப் பக்கமும் எதிரிகள், உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலையில் பணியாற்றுவது சவாலான ஒன்று. ஆனால் அதிலும் உற்சாகமும் மகிழ்ச்சியும் உண்டு.

ராணுவ பணியிலிருந்து திரும்பிய பிறகு, சாதாரணமாக வெளியே சென்றால் கூட , சற்று வித்தியாசமாக தென்படுவதெல்லாம் ‘ குண்டுகள்’ இருக்கும் இடமாகத் தான் தெரிந்தது. ஒரிரு வருடங்களுக்குப் பிறகே கொஞ்சம் சகஜ நிலைக்கு வர முடிந்தது. இப்போது கூட என் காருக்குப் பின்னால் ஏதாவது ஒரு கார் , ஓரிரு மைல்களுக்கு மேல் தொடர்ந்தால் எச்சரிக்கை ஆகிவிடுவேன்.

அதே கார், என்னுடைய குடியிருப்புப் பகுதிக்குள்ளும் பின் தொடர்ந்த்தால், என் வீட்டுக்கு போக மாட்டேன். சுற்றி வேறு எங்காவது செல்வேன். அந்த கார் நபர் சாமானியராக எந்த ஆபத்தும் இல்லாதவராக இருக்கக்கூடும். ஆனாலும் ராணுவ எச்சரிக்கை என்பது ரத்தத்தில் கலந்து விட்டது.

ராணுவத்திலும், அதற்குப் பிறகும் உள்ள வாழ்க்கையை சொன்னீர்கள். தற்போது வட கொரியா அச்சுறுத்தல் என்றெல்லாம் செய்திகள் வருகிறதே. நீங்கள் அதை எவ்வாறு உணர்கிறீர்கள்..

ராணுவத்தில் இருக்கும் போது உடனுக்குடன், எங்களுக்கான தகவல்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. அதையெல்லாம் தெரிந்து கொள்ள முடியவில்லையே என்ற ஒரு விதமான ஏக்கம் இருக்கிறது.

ஆனால் வெளியே ஊடகங்களில் சொல்வதைப் போல் வட கொரியாவால் அமெரிக்காவுக்கு ஆபத்து என்பது எல்லாம் நம்பக்கூடியது அல்ல. அவர்கள் எந்த வித ஏவுகணை அனுப்பினாலும், அதை சமாளிக்கும் வல்லமை அமெரிக்க ராணுவத்திற்கு உண்டு. அமெரிக்க மண்ணில் வட கொரியாவால் எதுவும் செய்து விட முடியாது.

தென் கொரியா மற்றும் சுற்றியுள்ள ஆசிய பிராந்தியத்தில் , வட கொரியா ஏதாவது அசம்பாவிதம் செய்யக்கூடும். அதையும் அமெரிக்க ராணுவம் உடனடியாக தடுத்து நிறுத்தி, பதிலடி கொடுத்து விடும் என்றார்.

வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, அணு ஆயுதம், கிம் ஜாங் உன் மிரட்டல், பதிலுக்கு ட்ரம்பின் எச்சரிக்கை எல்லாமும் வெறும் வேடிக்கை விளையாட்டா?

– இர தினகர்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!