கந்து வட்டியிலிருந்து தமிழ் சினிமாவை மீட்க என்ன வழி? Exclusive - VanakamIndia

கந்து வட்டியிலிருந்து தமிழ் சினிமாவை மீட்க என்ன வழி? Exclusive

திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமாரின் மரணத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாத் துறை மிகப்பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர்களுக்கு ஆதரவாகவும் , எதிராகவும் இரு அணியாக பிரிந்து நிற்கிறார்கள். படத்தயாரிப்புக்கு வேறு வகையில் முறையான கடன் வசதி கிடைக்காத நிலை தான் இதற்குக் காரணம்.

கடன் கொடுப்பவர் நேர்மையானவராகவே இருந்தாலும், கொடுக்கும் வட்டி அளவுக்கு அதிகமானது என்பதை இரு தரப்பும் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். ஒரு துறை வெற்றிகரமாக செயல்பட, குறைவான வட்டிக்கு பண முதலீடு கிடைப்பது அவசியமானது. பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்றவாறு குறைந்தபட்ச வட்டி சதவீதத்தை, ரிசர்வ் வங்கி நிர்ணயிப்பது இந்த அடிப்படையில் தான்.

தமிழ் சினிமாத் துறையைப் பொறுத்தவரையில், முதலீடு என்பது சொந்தப் பணமாக இருக்க வேண்டும், அல்லது பைனான்சியர்களிடம் அதிகப்பட்ச வட்டிக்கு வாங்கிய கடனாகத் தான் இருக்க வேண்டும். வங்கிகள் ஒரு சில தயாரிப்பாளருக்கு, தனிப்பட்ட சொத்துகள் மீது கடன் வழங்குகிறது. ஆனால், தமிழ் சினிமாவின் ஒராண்டு முதலீட்டளவில், இத்தகைய வங்கிக்கடன் என்பது மிகக்குறைந்த தொகையே ஆகும்.

கடன், கந்து வட்டி, வங்கி என்று வழக்கமான சிந்தனையில் பார்த்தால் தமிழ் சினிமாவின் இந்தப் பிரச்சனைக்கு விடிவு கிடையாது. சினிமாத் துறைக்கு Venture Capital முறை முதலீடு தீர்வாக இருக்க முடியும். புதிய துறைகளிலும், புதிய டெக்னாலஜியிலும் Venture Capital முதலீட்டாளர்கள் பெருமளவில் முதலீடு செய்கிறார்கள். துறை வளர்ச்சிக்கும் உதவுகிறது. முதலீட்டாளார்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது.

இன்று டெக்னாலஜி வெகுவாக முன்னேறியுள்ள காலக் கட்டத்தில், படித்த இளைஞர்கள் பலருக்கும் வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக தமிழ் சினிமா இருக்கிறது. VFX உள்ளிட்ட கம்ப்யூட்டர் மயமாகி உள்ள துறையில், சார்பு நிறுவனங்களும் நிறைய உருவாகியுள்ளன. எல்லா வகையிலும் சினிமாத் துறை நல்ல லாபகரமான தொழில். அதே சமயத்தில் அதிகமான ரிஸ்க் உள்ள துறையும் கூட. ஒரு முறையான கட்டமைப்பு உருவாக்கி, முதலீட்டாளர்களுக்கு வெளிப்படையான தகவல்களுடன் ’இன்வென்ஸ்ட்மெண்ட் செக்யூரிட்டிகள்’ , ‘ முதலீட்டுப் பத்திரங்கள்’ என வெளியிட்டு முதலீடு திரட்டலாம்.

ஹாலிவுட்டிலும் ஏராளமான படங்கள் தயாரிக்கப் படுகிறது. வாரம் தோறும் புதுபுதுப் படங்கள் வெளியாகின்றன. பெரிய படங்கள் மட்டும் தான் பேசப்படுகின்றன. அதிக லாபம் சம்பாதிக்கின்றன. ஆனால் அங்கும் மினிமம் பட்ஜெட் படங்களும், அதற்குரிய லாபத்துடன் வெளியாகி வெற்றி பெறுகின்றன. சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் என்ற பாகுபாடின்றி, தயாரிப்பாளர்களால், எளிதாக முதலீடு மற்றும் கடன் பெற முடிகிறது. ஹாலிவுட்டை பல வகையிலும் பின்பற்றும் தமிழ் சினிமாத் துறை, முதலீட்டிற்கும் அங்குள்ள நடைமுறையை இங்கு அறிமுகப் படுத்த முன்வரலாம்.

முதலீட்டுப் பத்திரங்கள் உள்ளிட்ட பல வகையான நடைமுறைகளை அறிமுகப்படுத்தினால், புதிய தயாரிப்பாளர்கள், புதிய இயக்குனர்கள் என அனைவருக்கும் தயாரிப்புக்கான பணத்தை திரட்ட முடியும். வசூல் உட்பட அனைத்திலும் வெளிப்படைத் தன்மை முதலில் பின்பற்ற வேண்டும். படம் வெற்றியைப் பொருத்து, முதலீட்டாளர், தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ உட்பட அனைவரும் லாப நட்டத்தை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும்.

Venture Capital முதலீட்டாளர்களுக்கு, உலக அளவில் வியாபரம் நடைபெறும் தமிழ் சினிமா மிகப்பெரிய வாய்ப்பு. முறையான அமைப்பு, நடைமுறை, Risk ஐ பகிர்ந்து கொள்ளுதல் என்ற திட்டங்களுடன் அணுகினால் நிச்சயம் புதிய முதலீடுகள் திரட்ட முடியும். சினிமாத் துறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்

சமீபத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் 250 கோடி வரை வசூலானதாகச் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது அந்தப் படத்தால் 25 சதவீதம் நட்டம் என்று கூறப்படுகிறது. இப்படி முரண்பட்ட, வெளிப்படைத் தன்மை இல்லாத நிலை முதலில் மாற வேண்டும். லாபமோ, நட்டமோ முறையாக, வெளிப்படையாக, முழு விவரத்துடன் வெளிவந்தால் தான், புதிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.

வெளிப்படைத் தன்மையுடன், முறையான தொழில் துறையாக மாற்றி புதிய முதலீட்டாளர்களை கவர்வதா? அல்லது திரைமறைவாகவே இருந்து கந்து வட்டிக்காரர்களிடம் கடன் பட்டு சிக்குவதா ? என்று தமிழ் சினிமாத் துறையினர் சிந்திக்க வேண்டிய நேரம் இது!

– ஏ.ஜே. பாலசுப்ரமணியன்

குறிப்பு: கட்டுரையாளர் பிரபல அமெரிக்க நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் மேலாண்மை இயக்குனரும், Venture Capital முதலீட்டாளரும் ஆவார். இந்தியாவில் பல புதிய நிறுவனங்களை Venture Capital முதலீடு மூலம் உருவாக்கியவர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய துறைகளில் அதிக கவனம் செலுத்துபவர். வேலை வாய்ப்புத் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி என்று இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தும் வருகிறார்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!