Actor Jeeva asks Rajini fans to restrain from attacks

சக்தியை வீணாக்காதீர்கள்.. ரஜினியின் காவலர்களுக்கு நடிகர் ஜீவா வேண்டுகோள்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் வருவது பற்றி அறிவித்த நாள் முதல் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி என அனைத்து தரப்பினரும் சமூக தளங்களிலும் தொலைக்காட்சியிலும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஜினி ரசிகர்களும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பதிலுக்கு பதில் என்ற வகையில் அதிரடியாக இருக்கிறது. இந் நிலையில், ரஜினி ரசிகர்கள் தங்கள் சக்தியை வீணாக்க வேண்டாம் என்று நடிகர் ஜீவா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது,

“தலைவர் கூறியது போல எதிர்ப்பே மூலதனம். இவர்கள் நமக்கு உதவி தான் செய்து கொண்டுள்ளார்கள். தேர்தல் அடுத்த மாதமே வரப்போவதில்லை, நாட்கள் பல இருக்கின்றன. இவர்கள் தேவையற்று தற்போதே தங்களின் சக்தியை வீணடித்து வருகிறார்கள்.

தலைவர் கூறியது போல இவர்களுக்குப் பதில் கூறி உங்கள் சக்தியை, நேரத்தை வீணடிக்காதீர்கள். அதற்குப் பதிலாக உண்மை செய்திகளைப் பொதுமக்களிடம் கொண்டு சேர முயற்சியுங்கள். மன்றத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுங்கள்.

ரஜினி எதுவும் சொல்லாமல் தள்ளி வைத்து விடுவார் என்று மிகுந்த நம்பிக்கையோடு இருந்தவர்களுக்கு, தலைவர் அதிர்ச்சி கொடுத்ததால், அந்த ஏமாற்றத்தை அதனால் ஏற்பட்ட பயத்தைத் தாங்க முடியாமல் வன்மத்துடன் தற்போது செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

தலைவர் ஏதாவது சொல்லும் போது இவர்களின் பதட்டம் அதிகம் இருக்கும், இது எதிர்பார்த்த ஒன்று தான். எதிர்மறை செய்திகளைப் புறக்கணியுங்கள். தலைவர் கூறியது போல இவைகள் நம் எண்ண ஓட்டத்தையே மாற்றி அமைக்கக்கூடியவை.

நேர்மறை சிந்தனைகளே நம்மை மேம்படுத்தும். எனவே, “நல்லதையே நினையுங்கள்! நல்லதே நடக்கும்!” என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார்.

– வணக்கம் இந்தியா

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!