ஆத்மார்த்த தம்பதியரின் அந்திம யாத்திரை - உண்மைச் சம்பவம்! - VanakamIndia

ஆத்மார்த்த தம்பதியரின் அந்திம யாத்திரை – உண்மைச் சம்பவம்!

அவர்கள் ஒரு அன்யோன்யமான வயதான தம்பதியினர். பெரியவருக்கு 83 வயது. அந்த அம்மாவுக்கு 78 . அறுபது வருட தாம்பத்ய வாழ்க்கை. பார்த்த நல்லது கேட்டதுகளோ ஏராளம் ! பிள்ளைகள் திருமணமாகி பேரன் பேத்திகளைக் கண்ட பேரானந்தமான வாழ்க்கை. அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைப் பற்றி பார்க்கலாம்.

இதுவரை அந்த அம்மாள் தனியாக ஓரிடம், சொல்லப்போனால் அக்கம்பக்க வீடுகளுக்கு கூட சென்றதாய் ஞாபகமேயில்லை. அவரோ அரை மணிக்கொருதரம், தன் மனைவி எங்கிருக்கிறாள் என தேடிக் கொண்டேயிருப்பார் தன் வீட்டில் கூட. மகன்களிடமும், மருமகள்களிடமும் ‘அம்மா எங்கே எனவும், அப்பா எங்கே’ எனவும் அவர்கள் கேட்டபடியே இருப்பார்கள். ‘மாடிக்குப் போயிருக்கம்மா.. பாத்ரூம் போயிருப்பாப்பா’, என அட்டெண்டன்ஸ் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

கடைசிகாலம் வரை அந்த அம்மாவிற்கு உடல்நிலைக்கு BP மாத்திரையும், தண்ணீரும் அவர் தான் கையில் கொடுப்பார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! மதிய சாப்பாடுக்கு, பெரியவர் வர லேட்டானால் சாயங்காலம் 4 மணி ஆனாலும் சாப்பிடாமல் காத்திருப்பார் அந்த அம்மா. நடக்கும் அத்தனை சுபநிகழ்ச்சி, விசேஷ நாட்களில் சொல்லும் ஒரே வார்த்தை “சுமங்கலியா நான் போகணும்” என்பதுதான். ‘நல்ல நாள்ல என்னமா பேசற ‘ என கேட்கும் பிள்ளைகளிடம், ‘அப்பா போறதுக்கு முன்னாடி நான் போயிடனும்’ என்பார்.

மரணபயம் ஏதும் இல்லை, கணவரை இழந்துவிடக் கூடாது என்ற பயம் மட்டும் பெரிதும் வந்துவிட்டது. பெரியவர் இப்படியெல்லாம் ஓபனாக பேச மாட்டார். ஆனால் கையில், கண்ணில், கருத்தில் வைத்து தாங்கியதை வீட்டினர் கண்ணார பார்த்தனர். வாழ்ந்தகாலத்தில், இதே வயதை ஒத்த அக்கம்பக்கத்தினருக்கும், உறவுக்காரர்களுக்கும் ஆச்சரியமாகவும், இவர்களைப்போல வாழ ஆசையும் இருந்தது.

எல்லோரும் ஒரு நாள் போகத்தான் வேண்டும் என்ற எழுதப்பட்ட சட்டதினாலோ என்னவோ, நல்ல ஆரோக்கியமாக, எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாத , 6 மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ சோதனைகள் செய்து கொள்ளும், ஒழுங்காக வாக்கிங், டயட் எல்லாம் செய்தும், டேபிள் டென்னிஸ், பேரக்குழந்தைகளுடன் எல்லா விளையாட்டுகளும் விளையாடிய தாத்தாவான பெரியவர்க்கு, சிறிது சிறிதாக உணவின் மேல் உள்ள நாட்டம் குறைந்தது. முழுங்கவும் கஷ்டப்பட்டார்.

குடும்பமே பதறியது. உடல் எடையும் குறைய ஆரம்பித்தது. மகன்கள் மருத்துவப் பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். அதிர்ச்சி வெளி வந்தது. வயிற்றின் ‘Duodenum ‘ பகுதியில் கேன்ஸர். கண்டுபிடித்த அன்றே முடிவைச் சொன்னார்கள்- 2 , 3 மாதங்கள் மட்டுமே இருப்பார் என்று. படிக்கும் எல்லோராலும் உணரமுடியும் , வீட்டின் மனநிலை எப்படி இருக்கும் என .

வீட்டில் ஒரு முக்கிய விசேஷம் நடந்ததால் பிள்ளைகள் , மருமகள்கள் , பேரக்குழந்தைகள் அனைவரும் ஒன்றாக இருந்தனர். அது யதேச்சையாக நடந்ததா.. கடவுளின் திட்டமிடலா.. யாருக்கும் தெரிய வில்லை ! படிப்படியாக விஷம் ஏறுவதுபோல,டாக்டர்கள் குறிப்பிட்ட காலத்தை விட இவர் உடல் மோசமாக ஆரம்பித்தது.படுத்த படுக்கையாகி விட்டார். என்னென்ன டிரீட்மெண்டுகள் உள்ளதோ, அத்தனையும் செய்ய குடும்பம் ரெடி ஆகி பண்ண ஆரம்பித்தனர். நடக்கும் எதுவும் அந்த அம்மாவுக்கும், பெரியவருக்கும் தெரியாமல் ரகசியமாக்கினர்.அவர்கள் சந்தேகப்பட்டு கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு ஏதேதோ பதில் சொல்லி சமாளித்தனர்.தெரிந்த நண்பர்கள்,குடும்ப டாக்டர்கள் கூறிய மருத்துவ முறைகளில் ஒத்துக் கொள்பவைகளைச் செய்தனர்.

இதனிடையில், கணவர் தினமும் மருத்துவமனை செல்வதைக் கண்ட அந்த அம்மா, மிகவும் தவிக்க ஆரம்பித்தார். வீட்டிலிருப்போரை கேள்விகளால் துளைத்தார். அழ ஆரம்பித்தார்.ஒருநாள் ஆஸ்பத்திரிக்குப் போக பெரியவரைத் தூக்கிக் கொண்டு ஹாலில் உட்காரவைத்து விட்டு, பிள்ளைகளில் ஒருவர் கார் எடுக்க வெளியே சென்றபோது, அந்தம்மா கேட்ட கேள்வி, பின்னாளில் குடும்பத்தினருக்கு ஒரு விடையை கொடுத்தது என்றே சொல்லலாம்.அக்கேள்வி, “ஏண்ணா,என்னை விட்டுட்டு, எனக்கு முன்னாடி போயிடுவேளா?” என அழுதுகொண்டே கேட்டதுதான். அன்றிலிருந்து தானும் ஒருமாதிரி அமைதியாகி விட்டார்.

ஒருநாள் நள்ளிரவு, பாத்ரூம் சென்றுவந்த அம்மா,திடீரென மயக்கமாகி கணவர் மேலேயே சாய்ந்தார்.யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை. உடனடியாக புகழ்பெற்ற மருத்துவமனையில் ICU வில் சேர்க்கப்பட்டார்.இப்படியே பாதி மயக்கமும்,பாதி ஞாபகமுமாக 8 நாட்கள் இருந்தார். இந்நிலையில் பெரியவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நிலையாகவே , அதே மருத்துவமனையில் ICU வில் சேர்க்கப்பட்டார்,அந்த அம்மா நம்பர் 1 பெட்,அவர் நம்பர் 8 பெட். இருவருக்குமே , தாங்கள் ஒரே அறையில் இருப்பது தெரியாது.பெரியவருக்கு இரண்டொரு நாட்களே குறித்தனர்.அந்தம்மா கூட பிழைத்துவிடுவார் என டாக்டர்கள் சொன்னார்கள்.

ஆனால் மறுநாள் அதிகாலை போன் வந்தது, அந்தம்மாக்கு முதல் கார்டியாக் அரெஸ்ட் என.ஏன்,என்னாச்சு என அனைவரும் ஓடினார்கள். அதற்குள் 2 ,3 என ஆகி, இறந்தேபோனார்! .ஒரே அறையில்,மனைவிக்கு துணைபோல வந்த கணவருக்குத் தெரியாது. ஆனால் அந்தம்மா ஜெயித்து விட்டார்.’என்னை தனியே எங்கும் விடாத நீ,இறப்பில் மட்டும் முன்னே போவாயோ’ என அவரை இழுத்துப்பிடித்து நிறுத்திவிட்டு,நெற்றியில் குங்குமத்தோடு,தான் பல காலம் ஆசைப்பட்டதைப் போலவே சுமங்கலியாகப் போய் சேர்ந்தார் !

அம்மாளின் உடலை வீட்டுக்கு கொண்டுவந்த சில மணித்துளிகளில் பெரியவர் நிலைமை மிக மோசமானது.இங்குஇருந்து சாஸ்திர சம்பிரதாயங்களைச் செய்வதா,மானசீகமாக தன் மனைவி போய்விட்டதை உணர்ந்து போகத்துடிக்கும் தந்தையுடன் போய் இருப்பதா…என பிள்ளைகள் திணறினர். மறுநாள், தாயின் உடலை மயானத்தில் சமர்பித்துவிட்டு திரும்புகையில், தந்தையும் இறந்துவிட்டார்.இதை எதிர்பார்க்காத ஊருக்குத் திரும்பிய சில உறவுகள்,பாதி வழியிலேயே திரும்ப, அழைத்த அதே ஆம்புலன்ஸ்,அதே புரோகிதர்,அதே மயான வண்டி என இம்மி அளவும் பிசகாமல் எல்லாம் நடந்து,மயானத்திலும் மனைவி பக்கத்திலேயே தானும் ஐக்கியமாகி விட்டார்.ஆஸ்பத்திரி ரெஜிஸ்டரிலும் இவர்கள் இருவருக்கும் நடுவில் எவரும் இறக்கவில்லை,டெத் ரெஜிஸ்டரிலும் அடுத்தடுத்த நம்பர் !!

ஊரே அழுவதை விடுத்து,வியந்தது,இதென்னடா , அதிசயமா,ஆச்சரியமா இருக்கே என.இன்று வரை புரியாத புதிர், ”பெரியவருக்குத்தான் அப்படிப்பட்ட இறுதி முடிவு,அந்த அம்மாள் ஏன் முந்திக்கொண்டார்” என்று !! இருவருள் ஒருவராய் வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே காரணமாக இருக்க வேண்டும்..

-ஷீலா ரமணன்.டெக்சாஸ்.

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!