ஒரு சின்ன குண்டு.. 72 வது வருடத்தில் ஹிரோஷிமாவும் நாகசாகியும் - VanakamIndia

ஒரு சின்ன குண்டு.. 72 வது வருடத்தில் ஹிரோஷிமாவும் நாகசாகியும்

டாம் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கு அப்போது 22 வயது இருந்திருக்கலாம். அமெரிக்க ஆக்ரமிப்பு படையில் பணிபுரிந்து கொண்டிருந்தார் அந்த பல் மருத்துவர். ஹிரோஷிமா மற்றும் நாகாசாகி நகரங்களில் அணுகுண்டு எரியப்பட்ட இரண்டு மாதங்கள் கழித்து அவர் ஹிரோஷிமா செல்கிறார். ஒரு அழகான நகரத்தை வேரோடு பிடுங்கி எரிய ஒரேயொரு அணுகுண்டு போதுமானதாயிருக்கிறது என்பதை அந்த பயணம் அவருக்கு உணர்த்துகிறது.

`அழிவு அழிவு எங்கு பார்த்தாலும் அழிவின் கோரத் தாண்டவம். முழுமையான அழிவு… ஒரு குண்டு அல்லது எவ்வளவு குண்டுகள் எரிந்தாலும் இப்படிபட்ட அழிவு சாத்தியமா என்று நமக்கு தோன்றும்` என்று அவர் அந்த பயணத்துக்கு பிறகு தனது காதலிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். முக்கியமான சில அடுக்கு மாடி கட்டடங்களை தவிர முழு நகரமும் சம தளத்தில் இருந்தன. எரிந்த நிலையில் வாகனங்கள், தெருக்களில் கற்குவியல்கள் என்று ஹிரோஷிமா அழிவின் நகரமாக இருந்தது.

`ஒரு சின்ன குண்டு இதையெலாம் சாத்தியப்படுத்தியிருக்கிறது என்பதை நம்ப முடியவில்லை` என்று சொல்கிறார் ஆர்ம்ஸ்ட்ராங். அணு குண்டு எரிவதற்கு முன்பு அமெரிக்க படைகளிடத்தில் இருந்த மனநிலை ஒன்றுதான். இந்த அணுகுண்டும் மூன்று நாட்களுக்கு பின்னர் நாகாசாகியில் எரியப்பட போகும் அணுகுண்டும் போரை முடிவுக்கு கொண்டு வந்துவிடும்.

ஆனால் இப்போது வரையில் அணு குண்டை எரிந்தது சரியா தவறா என்கிற விவாதங்கள் முடிவுக்கு வரவில்லை என்பதுதான் உண்மை.
சில வருடங்களுக்கு முன்பு ஹிரோஷிமா நகருக்கு சென்ற போது அங்கு அமைதி அருங்காட்சியகத்தில் அணு குண்டு விட்டுச் சென்ற அழிவின் தடங்களை பார்க்க முடிந்தது. இன்றோடு 72 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் அழிவின் அழுத்தமான தடங்களை இன்னும் சுமந்து கொண்டிருக்கிறது ஹிரோஷிமா. ஹிரோஷிமா நாகாசாகி மட்டுமல்ல, உலகமே சுமந்து கொண்டிருக்கிறது.

அணு ஆயுதங்கள் மீது தடை என்கிற முடிவை உலகம் எடுக்கும் வரையில் அந்த தடங்கள் நம்மை ஒரு பிசாசைப் போல பிடித்துக் கொண்டிருக்கும். இந்த வருடம் ஹிரோஷிமா நாகசாகி நகரங்களில் மாநகர தந்தைகள் விடுக்கும் செய்தியும் இதுதான். அணு ஆயுதங்கள் மீதான தடை. `72 வருடங்களுக்கு முன்பு ஹிரோஷிமா எதிர்கொண்ட நரகத்தை முடிந்து போன வரலாறு என்று விட்டுச் செல்ல முடியாது. அணு ஆயுதங்கள் இருக்கும் வரையில், அவற்றை பயன்படுத்துவோம் என்று கொள்கை முடிவெடுப்பவர்கள் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வரையில் அந்த நரகம் எப்போது வேண்டுமானாலும் நமது இன்றைய வாழ்க்கைக்குள்ளும் நுழையலாம்` என்கிறார் ஹிரோஷிமாவின் மாநகர தந்தை கசுமி மத்சுயி.

`அணு ஆயுதங்களை பயன்படுத்துவது மனித குலத்தின் மன்னிக்க முடியாத குற்றம். அவற்றை வைத்துக்கொண்டிருப்பது கோடி கோடியாக பணத்தை செலவு செய்து மனித குலத்திற்கு ஆபத்து விளைவிக்கும் செயல்` என்பது அவர் வாதம். இதற்கு எதிர்வாதம் புரிய முனைந்தால் அவர்கள் மனித குலத்தின் அழிவை விரும்புகிறவர்களாகவே இருப்பார்கள்.

நினைவு கூர்ந்து கடந்து செல்வதற்கு ஹிரோஷிமா வெறும் வரலாறு அல்ல. நிகழ்த்தப்பட்ட பிறகு பத்தாண்டுகள் கழித்தும் சசாகி போன்ற ஒரு சிறு குழந்தையின் கண்ணீராலும் மரணத்தாலும் உயிர்க்கப்பட்டு இப்போதும் நம்மை அச்சுறுத்தும் வரலாறு. அணு ஆயுத தடை என்பதே சசாகி போன்ற ஒரு சிறுமிக்கு நாம் செலுத்தும் மரியாதை, சசாகி போல இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் எண்ணற்ற குழந்தைகளுக்கு நாம் தரும் உத்திரவாதம்.
செய்வோமா?

– சுந்தர் ராஜன், பூவுலகின் நண்பர்கள்

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!