டல்லாஸில் 40 வது ஆண்டு பொங்கல் விழா.. 108 பெண்களின் கைவண்ணத்தில் தயாராகும் அறுசுவை உணவு! - VanakamIndia

டல்லாஸில் 40 வது ஆண்டு பொங்கல் விழா.. 108 பெண்களின் கைவண்ணத்தில் தயாராகும் அறுசுவை உணவு!

டல்லாஸ்: மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் 40 வது ஆண்டு பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. சனிக்கிழமை, ஜனவரி 13ம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் 16 வகையான கொண்டாட்டங்கள் இடம் பெறுகின்றன.

மேலும் முதல்முறையாக டல்லாஸில் செயல்படும், மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் அகடமி, கோப்பல் தமிழ் மையம், ப்ளேனோ தமிழ்ப் பள்ளி, கொங்கு தமிழ்ப் பள்ளி, வித்யா விகாஸ் தமிழ்ப் பள்ளி , பாலதத்தா தமிழ்ப் பள்ளி, அவ்வை தமிழ் மையம் ஆகிய 7 தமிழ்ப் பள்ளிகளும் இந்த விழாவில் இணைந்து கொண்டாட உள்ளார்கள்.

குடும்பத்தினருடன் பொங்கல் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வசதி, குழந்தைகளுக்கு இலவச பலூன்கள், இலவச மருதாணி, திருவிழா கடை வீதி, பொங்கல் காட்சித் தொகுப்பு, தமிழ்ப் பள்ளி அணி வகுப்பு, பெற்றோர் – குழந்தைகள் கேள்வி பதில் விளையாட்டு, கோமாதா பூஜை, 16 வகை உணவுகளுடன் வாழை இலை விருந்து, பொங்கல் நடனம், உரியடி, கயிறு இழுத்தல், பூப்பறிக்க வாரிங்களா ஆகிய பாரம்பரிய விளையாட்டுக்கள், இலவச கரும்பு, பாட்டுக் கச்சேரி, 500 குடும்பங்களுடன் பாரம்பரிய பொங்கல் என 16 அம்சங்களுடன் இந்த ஆண்டு கொண்டாடப் படுகிறது.

இது வரையிலும் 500 குடும்பங்கள் விழாவில் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளதாக விழாக் கமிட்டியினர் தெரிவித்தனர். 2000 முதல் 2500 பேர் வரை பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. இவர்களில் 15 புதுமணத் தம்பதிகளும் உள்ளார்கள். அவர்களுக்கு தலைப் பொங்கலாகும்.

இத்தனை பேர்களுக்கும் 16 வகை உணவுகள் தயாரிக்கும் பணியில் 108 பெண்கள் ஈடுபட்டுள்ளார்கள். தித்திக்கும் கரும்பும் அனைவருக்கும் இலவசமாக வழங்க உள்ளார்கள்.

அமெரிக்காவிலேயே இவ்வளவு அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் ஒன்றாகக் கூடி மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக பொங்கல் கொண்டாடடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

– வணக்கம் இந்தியா

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!