ஹுஸ்டன்: அமெரிக்காவின் பழம்பெரும் கோவில்களில் ஒன்றான ஹூஸ்டன் மீனாட்சி அம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குழுமி இருந்தார்கள். அமெரிக்க பக்தர் ஒருவர் கிடார் இசைத்து நமச்சிவாய நாமாவளி பாடினார்.
வெள்ளிக்கலசத்தில் பக்தர்கள் கொண்டு வந்த புனித நீரால், கருவறை விக்கிரகங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. உற்சவ மூர்த்திகளின் ஊர்வலம் கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
ஹெலிகாப்டர் மூலம் கோபுர கலசங்களுக்கு மலர் தூவப்பட்டது. பின்னர் கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேகத்தை யொட்டி, மீனாட்சி ஆலயத்தில் 63 நாயன்மார்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 12 ஆழ்வார்கள் 3 ஆச்சாரியர்களுக்கும் சிலைகள் பிரதிஷ்டை நடந்தது.
அய்யப்பன் சன்னதியில் 18 படிகள் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. டெக்சாஸ் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும், இருமுடி கட்டி வரும் பக்தர்கள் 18 படி வழியாகச் சென்று இருமுடி செலுத்திய வண்ணம் உள்ளார்கள்.
முருகன் வள்ளி- தெய்வானை திருமணம், ராமர் சீதை திருமணம், மீனாட்சி- சுந்தரேஷ்வர் திருமணம் ஆகியவைகளும் முறைப்படி சம்பிரதாயத்துடன் நடைபெற்றது. 30 பேர் கொண்ட கோவில் குருக்கள் குழு சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் மற்றும் சார்ந்த வைபவங்களை நடத்தினார்கள். தமிழகத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுவது போல் உணர்ந்ததாக பக்தர்கள் தெரிவித்தார்கள்.
8 அடி க்ரானைட் தூண்களுடன் கூடிய நாயன்மார்கள், ஆழ்வார்கள் மண்டபம், பண்டைய அரசர் கால கோவில்களை நினைவு படுத்தியது. முன்னதாக திட்டமிட்டிருந்தது போல் போல் கோவில் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக மீனாட்சி கோவில் அறக்கட்டளை நிறுவனர்கள் தெரிவித்தார்கள்.
வீரமணி ராஜு, ஷோபா ராஜூ ஆகியோரின் இசைக்கச்சேரி சிறப்பு சேர்த்தது. நாயன்மார்கள், ஆழ்வார்கள் பற்றி பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் சொற்பொழிவு ஆற்றினார்.
அமெரிக்கர் ஒருவர் கிடார் இசையுடன், நாயன்மார்கள் மண்டபத்தில் நமச்சிவாய நாமாவளி பாடிக்கொண்டிருந்தது அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது .ராம்நாத் சுப்ரமணி என்று பெயரை மாற்றிக் கொண்ட இவருடைய மனைவி பெயர் பவானி. இருவருக்கும் , இதே மீனாட்சி அம்மன் கோவிலில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஒவ்வொரு முக்கிய விழாவின் போதும் வந்து பாடுகிறார்.
விழாவில் உணவும் சிறப்பு சேர்த்தது. வாழை இலையில் அறுசுவை உணவு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகஸ்தர்களுடன் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும் இணைந்து செய்திருந்தார்கள்.
மீனாட்சி அம்மன் கோவில் வரலாற்றில் இடம்பெற்றுள்ள முக்கிய விழாவாக அனைத்து வகையிலும் சிறப்பாக இந்த, 11வது கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
வணக்கம் இந்தியா செய்திகள்.