16 points assuring Rajini's victory in politics2

ரஜினியின் வெற்றி சூட்சமம்.. எதிரணியை வீழ்த்தப்போகும் பதினாறு அம்சங்கள் – தொடர்ச்சி

முந்தைய பகுதி இணைப்பு: http://vanakamindia.com/16-points-assuring-rajinis-victory-in-politics/

என்னென்ன காரண்ங்களால் ரஜினி வெற்றி பெறுவார் என்ற அலசலை தொடர்கிறேன்.

ரஜினி ஏன் சரியான தேர்வு?

எனக்கு இந்து மதம் ரொம்பப் பிடிக்கும் ஆனால், மற்ற மதங்களை அநாகரீகமாக விமர்சித்துக் கடந்த 12 வருடங்களில் ஒரு முறை கூட எழுதியது கிடையாது, இனியும் எழுத மாட்டேன். அன்று முதல் இன்று வரை என்னுடைய தளத்தில் கருத்துரை இட்டு வரும் “யாசின்” ஒரு முஸ்லீம். இவரே நான் எப்படி எழுதி வருகிறேன் என்பதற்குச் சாட்சி.

நான் அதி தீவிர இந்து பற்றாளன் கிடையாது. எனவே, மதச்சார்பின்மை என்ற பெயரில் போலியாக இருக்கும் அரசியல் கட்சிகளும் வேண்டாம், தீவிர இந்து மதத்தைப் புகுத்தும் பாஜக வும் எனக்கு வேண்டாம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட போலி மதச்சார்பு பேசாத, அனைத்து மதங்களையும் மதிக்கும், நேசிக்கும் ரஜினியின் “ஆன்மீக அரசியல்” எனக்குப் போதும்.

வழக்கமான கட்சிகளின் போக்கை பிடிக்காதவர்களுக்கும், பாஜகவின் தீவிர இந்துத்துவ கொள்கைகள் பிடிக்காதவர்களுக்கும் சரியான மாற்றாக நிச்சயம் ரஜினி இருப்பார்.

ஆன்மீக அரசியலுக்கு மக்கள் ஆதரவு ஏன்?

ரஜினி கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கை, எவரையும் அநாகரீகமாகப் பேசாதது, “ஆம் நான் ஆன்மீகவாதி தான்! ஆன்மீக அரசியல் தான் செய்யப்போகிறேன்” என்று வெளிப்படையாக அறிவித்தது இவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும். பலர் எதற்காக நாத்திக, பகுத்தறிவு வேசம் போடுகிறார்கள் என்றே புரியவில்லை!.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இதில் மற்ற நம்பிக்கை உள்ளவர்களை எதற்கு விமர்சிக்க வேண்டும்? நக்கலடிக்க வேண்டும்?!

இவர்கள் யாரை திருப்தி செய்ய இப்படிப் பகுத்தறிவு ஆதரவு வேசம் போடுகிறார்கள்? பெரும்பான்மையானவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கும் போது!. எனவே, பெரும்பான்மை மக்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கும் போது ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஆதரவு நிச்சயம் இருக்கும்.

ரஜினி வரும் காலங்களில் எப்படி நடந்து கொள்ளப்போகிறார், அவரது திட்டங்கள், கொள்கைகளைப் பொறுத்து அவருக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவில் மாற்றம் இருக்கும்.

ரஜினியை எதிர்க்கும் அனைத்து அரசியல் கட்சிகள்

ரஜினியை திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், மதிமுக, பாமக, சீமான், வேல்முருகன், கௌதமன், உதயகுமார், திருமுருகன் காந்தி, அமீர், பாரதிராஜா தற்போது சரத்குமார் என்று அனைவரும் போட்டி போட்டுக் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

ரஜினி இன்னும் கட்சிப் பெயரைக் கூட அறிவிக்கவில்லை, அதற்குள் என்னமோ இதுவரை ரஜினி தான் தமிழகத்தை ஆட்சி செய்தது போலவும், தற்போது ஆட்சி செய்வது போலவும் அவரே அனைத்துக்கும் பொறுப்பு என்பது போல பேசி வருகிறார்கள்.

இதுவரை இருந்தவர்கள் என்ன செய்தார்கள், தற்போது இருப்பவர்கள் ஏன் செய்யவில்லை என்று கேட்க இவர்கள் எவருக்கும் தோன்றவில்லை. அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ரஜினியே முதலாக கருத்தை தெரிவிக்க வேண்டும் தீர்வு கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

“ரஜினி ரஜினி ரஜினி” என்று தூங்கி எழுந்தது முதல் படுக்கப்போகும் வரை அவரையே தொடர்ச்சியாகத் திட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

யாரையும் விமர்சிக்காத ரஜினி

ரஜினி எப்போதுமே எவரையுமே மரியாதைக்குறைவாக, அநாகரீகமாக விமர்சித்தது கிடையாது. இதுவே அவருடைய பலம். அனைத்து விமர்சனங்களையும் அமைதியாகக் கடந்து செல்கிறார்.

தற்போதும் எந்த விமர்சனத்தைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய அடுத்தக் கட்ட நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறார். ரஜினியே சொன்னது போல “பேச்சில் காட்டாமல் செயலில் காட்டி வருகிறார்”.

ரஜினிக்கு எதிரான ஊடகங்கள்

ஒருவருக்கு எதிராக இத்தனை ஊடகங்கள் செயல்பட முடியும் என்றால் அது ரஜினியாக மட்டும் தான் இருக்க முடியும். ரஜினியை வைத்து எத்தனை விவாதங்கள்? அவர் கூறாததையும் கூறியதாக அதற்கு ஒரு விவாதம்!

ரஜினியை எவ்வளவு மட்டப்படுத்த முடியுமோ அவ்வளவு செய்யப் பலர் தீவிரமாகப் பணியாற்றுகிறார்கள். Sponsor செய்து ஃபேஸ்புக்கில் தவறான செய்திகளை பரப்புகிறார்கள். ஒவ்வொரு ஊடகமும் ஒவ்வொரு அரசியல்வாதி கட்டுப்பாட்டில் உள்ளது.

ரஜினியை கேவலப்படுத்திப் பேச வேண்டும் என்ற வேண்டுகோளோடு தான் விவாதத்துக்கே அழைக்கிறார்கள். இணையச் செய்தித் தளங்களில் ரஜினியை விமர்சித்து எழுதினால் “Hits” கிடைக்கிறது என்று கண்டபடி மனம்போன போக்கில் கற்பனை கதைகளை ஊகங்களை எழுதி வருகிறார்கள். இதையெல்லாம் தாண்டி ரஜினி வெற்றிப் பெற வேண்டும் என்றால், கடும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டும். இதற்குக் கடவுள் துணையிருப்பார் என்று நம்புகிறோம்.

தெறிக்க விடும் ரசிகர்கள்

ரஜினி அறிவிப்பை வெளியிட்டு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியைச் செயல்படுத்த வேண்டும் என்று கூறிய போது, “சரி! கட்சி அறிவிப்பு இன்னும் வரவில்லையே… அங்கே இங்கே உறுப்பினர் சேர்க்கை நடைபெறும்” என்று நினைத்து இருந்தேன்.

ஆனால், நான் கற்பனையிலும் நினைத்து இராத அளவுக்கு உறுப்பினர் சேர்க்கை மிரட்டலாக நடைபெறுகிறது. என்னால் இதை நம்பவே முடியவில்லை. எப்படி இத்தனை பேர் ஆர்வமாகச் செய்கிறார்கள்? என்று வியப்பாக இருக்கிறது.

துவக்கத்தில் எதோ ஒரு மன்ற நிகழ்வு என்று தான் நினைத்தேன் ஆனால், வரும் தகவல்கள் கணக்கில்லாமல் உள்ளது. பெண்களும் ஆர்வமாகத் தங்களைப் பதிவு செய்வது வியப்பு தான்.

இவர்கள் சேர்க்கை அனைத்தும் வாக்காக மாறும் என்று கூற முடியாது ஆனால், ஒரு தார்மீக ஆதரவை கொடுக்கும் அதோடு மற்றவர்களிடையே பேசும் போது ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்த, ஆதரவை திரட்ட உதவலாம்.

உணராத எதிர்ப்பாளர்கள்

ரஜினியை விமர்சிக்கும் அரசியல் கட்சிகளும், ரஜினியை பிடிக்காத மற்றவர்களும் Troll Memes / விமர்சனம் என்று தங்கள் நேரத்தை வீணடிக்கும் நேரத்தில், ரஜினி தன்னை ரசிகர்கள் / மன்றம் மூலம் பலப்படுத்திக்கொண்டு இருக்கிறார்.

செயலி (App) வெளியிட்ட போது சிரித்தார்கள், தற்போது அதன் மூலமும், நேரடி உறுப்பினர் சேர்க்கை மூலமும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களை உறுப்பினர்களாக சேர்த்து இருக்கிறார்கள். வரும் காலங்களில் இது இன்னும் அதிகரிக்கும்.

மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமித்து அமைப்பைப் பலப்படுத்தி வருகிறார். ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், கல்வியாளர்களுடன் விவாதித்துத் திட்டங்களை உருவாக்கி வருகிறார்.

கட்சி அறிவிப்பை வெளியிடும் போதோ / மாநாட்டின் போதோ மிகவும் கட்டுக்கோப்பான அமைப்புடன் சிறப்பான திட்டங்களுடன் இருப்பார். தற்போது சிரித்துக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் அப்போது அமைதியாகி விடுவார்கள்.
இதை எதிர்ப்பாளர்கள் உணரும் போது நிலைமை கை மீறிச் சென்று இருக்கும்.

பத்தோடு பதினொன்று அல்ல ரஜினி!

ரஜினி பத்தோடு பதினொன்றாக வந்து செல்ல அரசியலுக்கு வரவில்லை. அவருக்கு மிகப்பெரிய திட்டங்கள், (விவசாய வளர்ச்சி, நீர் மேலாண்மை மற்றும் தொழில் வளர்ச்சி), குறிக்கோள்கள் உள்ளன. இதை அவர் முறையாக அறிவிக்கும் போது உணர்ந்து கொள்வீர்கள்.

இதை அடைய வெற்று விமர்சனங்களுக்குப் பதில் அளித்து அவரது நேரத்தை அவர் வீணடிக்க விரும்பவில்லை. பேசிக்கொண்டு இருப்பதை விட செயலில் காட்டுவதே சிறந்தது.

அவர் கூறிய “செவிட்டு தவளை கதை“யே இதற்கும் பொருந்தும். சில நேரங்களில் செவிட்டு தவளையாக இருப்பதே நமக்கு, நம்முடைய வளர்ச்சிக்கு நல்லது.

குறிக்கோளை நோக்கி செல்பவர்கள் விமர்சனங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள். பயப்படுபவர்களே மற்றவரின் வளர்ச்சியை பார்த்துப் பொறாமைப்பட்டு தொடர்ச்சியாக விமர்சித்துக் கொண்டு இருப்பார்கள்.

அனைத்து மதங்களையும் அனுசரித்து, சாதி மதப் பேதமற்ற, நேர்மையான ஆன்மீக அரசியலை ரஜினி முன்னெடுப்பார். அவரின் நல்ல நோக்கம் வெற்றி பெறும், இதற்கு கடவுள் உறுதுணையாக இருப்பார் என்று நம்புகிறேன்.

நல்லதே பேசுவோம்! நல்லதே நினைப்போம்! நல்லதே நடக்கும்!

மகிழ்ச்சி

– கிரி
நன்றி : www.Giriblog.com

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!