16 points assuring Rajini's victory in politics

ரஜினியின் வெற்றி சூட்சமம்.. எதிரணியை வீழ்த்தப்போகும் பதினாறு அம்சங்கள்!

டிசம்பர் 31 2017 ரஜினி ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள். “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று அறிவித்த நாள். ரசிகர்களின் பல வருட காத்திருப்புக்கு விடை கிடைத்த நாள். ரஜினி அரசியலுக்கு வருவார் வரமாட்டார் என்று உறுதியாக நம்பியவர்கள் கூட எதிர்பாராத அறிவிப்பு, “என்னுடையது சாதி மதமற்ற ஆன்மீக அரசியல்” என்ற அறிவிப்பு தான்.

உண்மையில் ரஜினி இப்படிக் கூறிய போது திக்குனு தான் இருந்தது. “என்னடா! இப்படி ஆன்மீக அரசியல்ன்னு சொல்லிட்டாரே! ஏற்கனவே ஆளாளுக்கு இதை வைத்தே பேசிட்டு இருக்கும் போது அவர்களுக்கு மெல்ல அவல் கொடுத்தது போல ஆகி விட்டதே!” என்று தான் நினைத்தேன். ஆனால், ஒரு வாரம் கழித்து ரஜினி கூறியது மிகச்சரியான தேர்வு தான் என்று புரிந்தது.

தனித்தன்மை

தற்போது அரசியலுக்கு வருகிறவர்கள் அனைவரும் கூறுவது ஊழலற்ற, நேர்மையான ஆட்சியைக் கொடுப்பேன் என்பது. இதில் என்ன வித்யாசம் இருக்கிறது? அனைவரும் வழக்கமாகக் கூறும் வசனம் தானே!

ரஜினி ஆன்மீகவாதி என்பது அனைவரும் அறிந்தது. அதை அவரும் யாருக்காகவும் மறைத்ததில்லை, மற்றவர்களைத் திருப்தி செய்ய நினைத்து வெளி வேசம் போட்டதில்லை. தற்போது “ஆன்மீக அரசியல்” என்று கூறியதன் மூலம் வழக்கமான அரசியல் செய்பவர்கள் அனைவரையும் ஒரு பக்கத்தில் தள்ளி விட்டு ரஜினி தனித்து வந்து விட்டார்.

இரண்டும் கெட்டானாக இருப்பதை விட, மற்றவர்கள் கூறத் தயங்கிய விசயத்தை தைரியமாக, தெளிவாகக் கூறிய ரஜினி பாராட்டுக்குரியவர். ரஜினியைப் பற்றி என்ன குற்றச்சாட்டு வேண்டும் என்றாலும் வைக்கலாம் ஆனால், அவர் மற்ற மதங்களை இழிவு படுத்திப் பேசினார் என்று ஒரே ஒரு உதாரணத்தைக் கூடக் காட்ட முடியாது. இதுவே இவரின் தனித்தன்மையான ஆன்மீக அரசியல்.

மற்ற மதங்களை விமர்சிக்காதவர்

திராவிடக் கட்சிகள் குறிப்பாகத் திமுக, இந்து கடவுள்களைத் திட்டுகிறார்கள், இந்து மதத்தை விமர்சிக்கிறார்கள், கிண்டலடிக்கிறார்கள். இந்து மதக் கட்சியான பாஜகவில் உள்ளவர்கள் இந்து மதத்தை உயர்த்த மற்ற மதங்களை விமர்சிக்கிறார்கள். முஸ்லீம் மற்றும் கிறித்துவக் கட்சிகளும் மற்ற மதங்களை விமர்சிக்கிறார்கள். நாம் எங்கு / யாராக இருந்தாலும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், விமர்சனம் நாகரீகமாக இருக்க வேண்டும். எதிர்கருத்துள்ளவரையும் மதிக்க வேண்டும்.

இந்த இடத்தில் தான் ரஜினி மிக உயர்ந்து இருக்கிறார். ஒரு முறை கூட மற்ற மதத்தை இழிவுபடுத்தியோ, அநாகரீகமாகப் பேசியதோ கிடையாது.

ஆன்மீக அரசியல் என்ன ?

ரஜினி ஆன்மீக அரசியல் என்று கூறிய போதே இது சாதி மதமற்ற அரசியல் என்று கூறி விட்டார். ஆன்மீகத்துக்கு மதம் கிடையாது என்பதையும் தெளிவுபடுத்தி விட்டார்.அவர் கிளம்பும் போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்குச் “சாதி மதமற்ற, நேர்மையான அரசியல்” என்று தெளிவாக விளக்கமும் கொடுத்து விட்டார்.

அனைத்து மதங்களுக்கும் பொதுவானவர்

2.0 இசை வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த் “என்னுடைய திரை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிப்படம் “பாட்ஷா” முஸ்லீம் பெயர், நான் முதன் முதலில் வாங்கிய இடம் முஸ்லீம் நபரிடம் இருந்து, போயஸ் தோட்ட வீடு வாங்கியது முஸ்லீம் நபரிடம் இருந்து” என்று பல உதாரணங்களைக் கூறி தனக்கும் முஸ்லீம் சமுதாயத்துக்கும் இருக்கும் உறவை விளக்கினார்.

ஒரு மதத்தில் தீவிர பற்றாக இருப்பவரால் இது போல நிச்சயம் கூற முடியாது. மதங்களைக் கடந்தவரால் மட்டுமே இன்னொரு மதத்துக்கும் தனக்கும் உள்ள தொடர்பைக் கூற முடியும். கோவை குண்டு வெடிப்பில் அப்பாவி முஸ்லிம்களுக்கு ஆதரவாக மற்றவர்கள் பேசத் தயங்கிய போது தைரியமாக ரஜினி பேசியது எல்லாம் இன்று பலரால் மறக்கப்பட்டு விட்டது.

எனவே, ரஜினி மற்ற கட்சிகள் பிரச்சாரம் செய்து வருவது போல நிச்சயம் மதவாதி அல்ல. உண்மையில் இவர்களே சாதி, மதத்தை வைத்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதை அறியாத மக்களும் ஏமாந்து வருகின்றனர்.

திராவிட கட்சிகளின் பகுத்தறிவு நாடகம்

திராவிடக் கட்சிகள் குறிப்பாகத் திமுக, இந்து மதத்தை, அவர்களது நம்பிக்கையைக் கடுமையாக விமர்சிக்கிறது ஆனால், அவர்கள் குடும்பத்திலேயே கடவுள் பக்தி உள்ளவர்களாகவும், கோவிலுக்கு செல்பவர்களாகவும் உள்ளனர். இதைக் கேட்டால், “நாங்கள் குடும்பத்தினர் நம்பிக்கையில் தலையிடுவதில்லை, எங்கள் கொள்கைகளை அவர்களிடத்தே திணிப்பதில்லை” என்று கூறுகிறார்கள்.

நியாயமான பேச்சு! ஆனால், இதையே ஏன் மற்ற இந்துக்களிடம் காட்டுவதில்லை. ஏன் கடுமையாக விமர்சிக்க வேண்டும்? இவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அது அவர்களின் நம்பிக்கை என்றால், மற்றவர்களுக்கும் அது தானே! அவர்களின் நம்பிக்கையை ஏன் கிண்டலடிக்க வேண்டும்?. இவர்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?!

கலைஞர் ஜெயலலிதாவின் ஆளுமை

40 வருடங்களுக்கு முன்பு பகுத்தறிவு கொள்கைகள், நாத்திகம் போன்றவை மக்களிடம் வரவேற்பை பெற்று இருக்கலாம் ஆனால், அதெல்லாம் கடந்த வருடங்களில் முற்றிலும் மாறி விட்டது. அதுவும் தற்போது கடவுள் / ஆன்மீக நம்பிக்கை தமிழக மக்களிடையே உச்சத்தில் இருக்கிறது.

இதுவரை கலைஞருக்கும் ஜெ க்கும் வாக்களித்தது அவர்களின் மிகப்பெரிய ஆளுமை காரணமாக மட்டுமே தானே தவிர அவர்களது நாத்திக கொள்கைகள் காரணமாக அல்ல. அதிலும் ஜெ கடவுள் நம்பிக்கையுள்ளவராகத் தான் தன்னைக் காட்டிக்கொண்டார். இவர்கள் இருவரைத் தவிர வேறு யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை என்பதே உண்மை.

அதாவது இவர்கள் ஊழல்கள் செய்து இருந்தாலும், இவர்கள் அல்லாது வேறு யார் வந்தாலும் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதே மக்கள் எண்ணம். கடந்த 25 வருடங்களில் திராவிடக் கட்சிகள் வெற்றி பெற்றதுக்குப் பகுத்தறிவு கொள்கைகளோ நாத்திகமோ காரணமல்ல, கலைஞர் ஜெ இருவரின் ஆளுமையே காரணம்.

அதிகரிக்கும் கடவுள் நம்பிக்கை

தமிழகத்தில் தற்போது மக்களிடையே ஆன்மீகம், கடவுள் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் மன ஆறுதல் தேவை போன்றவைகள் காரணமாக இருக்கலாம். தங்கள் பிரச்சனைகளை மறக்க இவர்களுக்கு ஆறுதல் தேவைப்படுகிறது.

இதைத் தான் பல கார்ப்பரேட் சாமியார்கள் தங்கள் மூளைச்சலவை திறமையால் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். எனக்கு ஆன்மீகத்தில் பிடித்த ஒரே ஒரு நபர் “வேதாத்ரி மகரிஷி” மட்டுமே!. பதிவுலகத்தில் முன்பு அனுராதா என்ற பதிவர் இருந்தார், அவர் கேன்சர் காரணமாகக் காலமாகி விட்டார். அவர் கூறிய வார்த்தை எனக்கு இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

“நாலு பக்கம் கஷ்டம் வந்தால், நாத்திகனும் ஆத்திகன் ஆகி விடுவான்” என்பது. பிரச்சனை வருகிற போது ஏதாவது பிடிப்புத் தேவைப்படுகிறது, அதைக் கடவுளாக அனைவரும் நினைக்கின்றனர் அவ்வளவே!

தமிழகத்தில் அதிகரிக்கும் பாபா கோவில்களும், அனைத்துக் கோவில்களிலும் வருடாவருடம் அதிகரிக்கும் மக்கள் கூட்டமும், ஆன்மீக சாமியார்களிடம் செல்லும் மக்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில் கடவுள் நம்பிக்கை / ஆன்மீகம் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன. இவை மறுக்க முடியாத நடைமுறை எதார்த்தம்.

போலி மதச்சார்பின்மை

தமிழகத்தில் மதச்சார்பின்மை என்றால் என்னவென்றால், இந்து மதத்தைத் திட்டுவது, அநாகரீகமாக விமர்சிப்பது, இந்து மதப் பண்டிகை நாளில் “விடுமுறை கொண்டாட்டம்” என்பது, இந்து பண்டிகையைப் புறக்கணித்துச் சிறுபான்மையினர் விழாக்களில் கலந்து கொள்வது.

இவை எல்லாவற்றையும் விட மதச்சார்பற்ற கூட்டணி என்ற பெயரில் முஸ்லீம் மற்றும் கிறித்துவக் கட்சிகளைச் சேர்ப்பது! இது எப்படி மதசார்பற்ற கூட்டணியாகும்?. இது தான் மதச்சார்பின்மையாகத் தமிழகத்தில் பின்பற்றப்படுகிறது. இதுவா மதச்சார்பின்மை?!

அனைத்து மதங்களையும் ஒருங்கிணைத்து செல்வது எந்த மதத்தையும் அநாகரீகமாக விமர்சிக்காமல் இருப்பது. அனைத்து மதங்களையும் முன்னிலைப்படுத்துவது. அனைத்து மதப் பண்டிகைகளையும் ஒரே சமமாகப் பார்ப்பது. அனைத்துப் பண்டிகைகளுக்கும் வாழ்த்துத் தெரிவிப்பது. இவைகள் தான் உண்மையான மதச்சார்பின்மையின் இலக்கணம். தமிழகத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை உங்கள் முடிவுக்கே விடுகிறேன்.

தொடர்ச்சி நாளை வெளி வரும்…

– கிரி
நன்றி : www.Giriblog.com

Author: admin
Tags

Comments (1)

  1. Rajagopalan says:

    Awesome….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!