என் ஆளோட செருப்ப காணோம்... விமர்சனம் - VanakamIndia

என் ஆளோட செருப்ப காணோம்… விமர்சனம்

தற்போதைய சூழ்நிலையில் சிறு பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் வெளியே வந்து நிலைத்து நிற்க பல யுக்திகளை, பல வியூகங்களையும் தன்னுடைய கதைகளின் வழியாக செலுத்தியாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றன. அப்படியாக சிறுபட்ஜெட்டில் உருவாகியுள்ள படம்தான் இந்த ‘என் ஆளோட செருப்ப காணோம்’.

ஒரு சிலருக்கு படத்தின் டைட்டிலே சில ஆர்வத்தைத் தூண்டலாம். என்னதான் படத்தில் சொல்ல வருகிறார்கள் என்று பார்த்துவிடலாமே என்று.

படத்தின் நாயகனாக வருகிறார் பசங்க, மெரினா, கோலிசோடா படத்தில் சிறுவனாக நடித்து, இப்போது வளர்ந்துவிட்ட தமிழ். நாயகியாக வரும் கயல் ஆனந்தியை முதல் முறை பார்த்த அந்த சமயம் காதலில் விழுகிறார்.

ஆனந்தி பேருந்தில் பயணம் செய்யும் போது தவறுதலாக அவரது ஒரு கால் செருப்பு தவறி விடுகிறது. பின் மற்றொரு கால் செருப்பை பேருந்திலேயே விட்டு விடுகிறார். ஆனந்தி செருப்பை தவறவிடும் அந்நேரத்தில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவரது அப்பாவை தீவிரவாதிகள் கடத்தி விடுகிறார்கள்.

இதனால், ஒரு குறிபார்க்கும் சாமியாரிடம் செல்லும் ஆனந்தி அவரது செருப்பு கிடைக்கும் நேரத்தில் அப்பா குறித்த நல்ல தகவல் கிடைக்கும் என சாமியார் கூறி விடுகிறார். இதனால் மனமுடைகிறார் ஆனந்தி.

தன்னுடைய காதலுக்காக நாயகிக்கு தெரியாமல் நாயகன் தமிழ் அந்த ஜோடி செருப்பை தேடி அலைகிறார். அந்த ஜோடி செருப்பு கிடைத்ததா…??? நாயகியின் தந்தை உயிரோடு கிடைத்தாரா..? தமிழின் காதல் ஜெயித்ததா என்பதை மீதிக் கதையாக தந்திருக்கிறார் இயக்குனர் ஜெகன்.

முதல் முறையாக தனி ஹீரோவாக டிராவல் செய்திருக்கிறார் தமிழ். தன்னுடைய கதாபாத்திரத்தை மிகவும் தெளிவாகவும், இயல்பாகவும் செய்து முடித்திருக்கிறார். படத்தின் மற்றொரு நாயகனாக வருகிறார் யோகி பாபு. இவர் வரும் நேரத்தில் தியேட்டரில் சிரிப்பு வெடிகள் சிதறுகின்றன. இவர் இல்லையென்றால் பொறுமையை கொஞ்சம் சோதித்துதான் பார்த்திருப்பார்கள் போல…

கயல் ஆனந்திக்கு பல படங்களில் நடித்த ஒரு அனுபவம் இருந்தாலும், அழகாக வந்து மட்டுமே செல்லும் ஒரு கதாபாத்திரம்தான். இருந்தாலும் அழகான மழை நேரங்களில் அவர் வந்து செல்வதால் மழையோடு சேர்த்து அவரையும் ரசிக்க கண்கள் துடிக்கதான் செய்கிறது.

கே எஸ் ரவிக்குமார், சிங்கம் புலி, பால சரவணன், லிவிங்க்ஸ்டன், ஜெயபிரகாஷ் தங்களது கடமைகளை செய்து முடித்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்தது எது என்றால் அழகான ஒளிப்பதிவு. மழைக் காட்சிகள் அனைத்திலும் காதல் செய்யும் தருணம் மனதை இதமாக வருடிச் செல்கிறது. இஷான் தேவ் இசையில் அபிமானியே பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகும். பின்னனி இசை ஓகே ரகம்.

அழகான எளிமையான ஒரு கதையை அழகான காட்சியமைப்புகளில் கொடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர் ஜெகன். அதற்காக அவருக்கு ஒரு வாழ்த்துக்கள் சொல்லிகொள்ளலாம்.

‘அட என்னப்பா ஒரு செருப்புக்கா இவ்ளோ அலப்பறை..’ என்ற ஒற்றை வார்த்தைகளில் விமர்சனம் சொல்பவர்கள் ஏராளம் இருக்கலாம். இந்தப் படம் அவர்களுக்கானதல்ல!

Author: admin
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!